தன் தாத்தாவுக்கும் தமிழ்த் திரையுலகுக்கும் இடையே இருந்த உறவு முடிந்துவிடக்கூடாது என்பதற்காகவே திரையுலகில் கால்பதித்ததாகச் சொல்கிறார் இளம் நாயகி சாய் பிரியா தேவா.
தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்த 'சிவலிங்கா' படத்தில் நடிகர் ஷக்திக்கு ஜோடியாக நடித்தவர் இவர். பின்னர் மலையாளத்தில் நடித்த படங்கள் வெற்றி பெறவே, அங்கு சில காலம் கவனம் செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் எழிலின் 'யுத்த சத்தம்' படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார்.
"ஆனால் இம்முறை கதாநாயகியாகத் திரும்பியுள்ளேன். இதுவே பெரிய வளர்ச்சியாகத் தோன்றுகிறது.
"எனக்கும் சினிமாவுக்கும் உள்ள இந்த பந்தம் என் தாத்தாவின் ஆசியால் ஏற்பட்டதாகக் கருதுகிறேன். காரணம், ஒரு காலத்தில் அவரை தெரியாதவர்கள் தமிழ்த் திரையுலகில் இருந்திருக்க முடியாது," என்கிறார் சாய் பிரியா.
சென்னையில் அந்த காலத்தில் மின்ட் பகுதியில் அமைந்திருந்த 'முருகன் டாக்கீஸ்' திரையரங்கம் மிகவும் பிரபலம். அதன் உரிமையாளர் பரமசிவம் முதலியாரின் பேத்திதான் சாய் பிரியா.
"அப்பா கப்பல் பொறியியலாளர். அம்மா ஆசிரியை. தாத்தாவின் மரபணுக்கள்தான் என்னுள் இருப்பதாக கருதுகிறேன். என் கொள்ளு தாத்தா சென்னை திரையரங்கைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். என் தாத்தா பரமசிவம் அதை சிறப்பாகப் பராமரித்தார்.
"எங்கள் திரையரங்கில் எம்ஜிஆரின் பல படங்கள் நிறைய நாள்கள் வெற்றிகரமாக ஓடின. அதனால் எம்ஜிஆரும் தாத்தாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
"அப்போதெல்லாம் சினிமா குறித்து, திரையுலக நிகழ்வுகள் பற்றி பெரியவர்கள் பேசிக்கொள்வதை பலமுறை கேட்டிருக்கிறேன்," என்று சிறு வயது நினைவுகளை அசைபோடுகிறார் சாய் பிரியா.
இவர் பேசும் தமிழ் அசத்தலாக உள்ளது. தாயார் தமிழ் ஆசிரியை என்பதால் தமிழில் சரளமாகப் பேச முடிகிறதாம். அது மட்டுமல்ல, சென்னை பெண்ணான இவர், எந்த மேடையில் ஏறினாலும், ஒரு திருக்குறளை சொன்ன பிறகே பேசத்தொடங்குவாராம்.
"அம்மா தேவிகா தமிழ் ஆசிரியை என்பதால் எனக்குள் தமிழ்ப் பற்றை வளர்த்தார். தினமும் திருக்குறள் சொல்லிக்கொடுப்பார். அதனால் மேடை ஏறியதும் தானாகவே திருக்குறள் வந்துவிடும்.
"பள்ளிப்படிப்பை முடித்த கையோடு, லண்டன் சென்று பல்லூடகத் துறையில் பட்டம் பெற்றேன். பின்னர் சென்னை வந்ததும் நடிப்புப் பயிற்சியும் மேற்கொண்டேன்.
"ஆனால் நான் சினிமாவில் நடிப்பதை வீட்டில் விரும்பவில்லை. எனக்கு உள்ள ஆர்வத்தைப் பார்த்ததும் அரை மனதுடன் சம்மதித்தனர். இப்போது எல்லாருமே என் பக்கம் வந்துவிட்டனர்.
"தொடக்கம் முதல் அம்மாதான் ஆதரவாக இருந்தார். நடிப்புப் பயிற்சியுடன் சில விளம்பரப் படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது வீட்டில் பேசி நடிக்க அனுமதி பெற்றுத் தந்தார்," என்கிறார் சாய் பிரியா.
"இயக்குநர் எழில் சாரின் 'யுத்த சத்தம்' படத்திற்கான நடிப்புத் தேர்வு நடைபெறுவதாக தகவல் கிடைத்தபோது உடனே புறப்பட்டுச் சென்றேன். அதிர்ஷ்டவசமாக அந்தப் படத்தின் நாயகியாக தேர்வு பெற்றேன். எழில் சார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தது பெருமையாக உள்ளது.
"சிறு வயதில் சினிமா மீது அதீத ஆர்வம் ஏற்பட்டது. எதிர்காலத்தில் சினிமாவில்தான் சாதிக்க வேண்டும் என எனக்குள் நானே ஒரு விதையை விதைத்துக்கொண்டேன். அதுதான் இப்போது வளர்ந்து பெரிதாகி என் ஆசையை நிறைவேற்றி உள்ளது.
"இதற்கு எனது முன்னோர்களின் ஆசியும் காரணம் என்று நம்புகிறேன். இல்லையெனில் நான் உங்கள் முன்பு நடிகையாக இன்று பேசிக் கொண்டிருக்க முடியாது. ஏதேனும் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்திருப்பேன். அல்லது வேறு துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை," என்கிறார் சாய் பிரியா.
மலையாளத்தில் இவர் நடித்து வெற்றிபெற்ற 'என்டே உம்மண்டே பேரு' படத்தைத் தயாரித்த நிறுவனமே தமிழில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாம். அதில் சாய் பிரியாதான் கதாநாயகி.
பாதி படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. மேலும், வடிவுடையான் இயக்கத்தில் 'பாம்பாட்டம்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் 'நான் அவனில்லை' ஜீவன் நாயகனாக நடிக்கிறார்.
இதுவரை தனக்கு வாய்ப்பு கேட்டு இவர் யாரையுமே அணுகியதில்லையாம். தமக்கான வாய்ப்புகள் தன்னால் தேடி வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பதாகச் சொல்கிறார். மேலும், இந்த கொள்கையுடன் இருப்பதால் தான் தமக்கு தொடக்கம் முதலே திரை உலகில் ஒரு மரியாதை இருப்பதாகச் சொல்கிறார்.
"எதிர்காலத்தில் விஜய், அஜித், சூர்யா, சிம்பு என பெரிய நடிகர்கள் அனைவருடனும் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். அதேபோல் பெரிய இயக்குநர்களின் படங்களிலும் நடிக்க ஆசை.
"சிறு வயதில் என் மனதுக்குள் நானே விதைத்த விதை என்னை நடிகையாக்கி உள்ளது. அதேபோல் எனது எதிர்கால விருப்பங்களும் நிச்சயம் நிறைவேறும் என உறுதியாக நம்புகிறேன்," என்று கண்களில் கனவுகள் மின்னச் சொல்கிறார் சாய் பிரியா தேவா.
, :
சாய்
பிரியா

