செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'நானே வருவேன்' படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்பதும் அவர்களில் ஒருவராக இந்துஜா ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் தெரியும். இந்நிலையில், மற்றொரு நாயகியாக சுவீடனைச் சேர்ந்த எல்லி அவுரம் என்ற நடிகையை ஒப்பந்தம் செய்துள்ள னர். தமது சமூக ஊடகப் பக்கத்தில் 'நானே வருவேன்' பட சுவரொட்டியைப் பகிர்ந்துள்ளார் எல்லி. இவர் ஏற்கெனவே நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், தமிழில் 'பாரிஸ் பாரிஸ்' என்ற படத்தில் காஜல் அகர்வாலுடன் இணைந்து நடித்தவர். இதற்கிடையே, 'நானே வருவேன்' படத்தின் சுவரொட்டியில் தனுஷ் புகைப்பிடிப்பது போல் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. இதற்கு சமூக ஊடகங்களில் பலர் கண்டனம் தெரிவித்துள்ள னர். "புகைப்பிடிக்காமல் உங்கள் கதாநாயகனால் தமது மிடுக்கை வெளிப்படுத்த இயலாதா?" என்று அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்துவிட்டு, ஒரு துணை நடிகைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக்கூட தமக்கு அளிக்கவில்லை என நடிகை அலியா பட் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தப் படத்தில் தாம் நடித்த முக்கிய காட்சிகள் பலவும் நீக்கப்பட்டுவிட்டதாக இயக்குநர் ராஜமௌலியை அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
இதையடுத்து தமது சமூக ஊடகப் பக்கங்களில் இருந்து 'ஆர்ஆர்ஆர்' படம் தொடர்பாக தாம் பகிர்ந்த புகைப்படங்கள், அறிவிப்புகள் என அனைத்தையும் அவர் நீக்கிவிட்டதாகத் தகவல். மேலும், இயக்குநர் ராஜமௌலியை பல்வேறு சமூக ஊடகங்களில் பின்தொடர்ந்த அவர், அதையும் கைவிட்டுள்ளார். 'ஆர்ஆர்ஆர்' சம்பந்தமாக ஊடகங்களில் தாம் ஏதும் பேச விரும்பவில்லை என்றும் அவர் கூறிவிட்டாராம்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத் தில் கடந்த 2019ஆம் ஆண்டு 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வெளியானது. வசூல் ரீதியில் இந்தப் படம் பெரிதாக சாதிக்க வில்லை. இதில் நாயகனாக நடித்த சிவகார்த்திகேயனுக்கு பேசப்பட்ட சம்பளத்தில் ஞானவேல் ராஜா ரூ.11 கோடியை மட்டும் தந்துள்ளார் என்றும் மீதத்தொகையை தராமல் இழுத் தடித்து வருவதாகவும் சிவா தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பள பாக்கியைத் தர உத்தரவிடக் கோரி ஞானவேல் ராஜாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் சிவா. மேலும், சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை ஞானவேல் ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்யவும் அவரது படங்களுக்கான திரையரங்க, ஓடிடி வெளியீட்டு உரிமைகளை விற்க தடைவிதிக்க வேண்டும் என்றும் தமது மனுவில் சிவா வலியுறுத்தி உள்ளார்.
வாழ்நாள் முழுவதும் சினிமாவில் நடித்துக் கொண்டே இருக்க வேண் டும் என்ற எண்ணம் தமக்கு இல்லை என்கிறார் டாப்சி. மீதமுள்ள வாழ்க்கையைக் கழிக்க போதுமான பணம் சேர்ந்துவிட்டதாக தனது ஆழ்மனம் சொல்லும் பட்சத் தில் உடனடியாக திரை உலகை விட்டு விலகி விடுவதுதான் தமது திட்டம் என்றும் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். "என் எண்ணங்கள் எப்போதும் ஒரு நடுத்தர மக்கள் வாழ்க்கை முறையின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். ஆடம்பர வாழ்க்கை எனக்கு அறவே பிடிக்காது. இப்போதும்கூட ஒரு பொருள் வாங்கவேண்டும் என்றால் ஒன்றுக்குப் பத்து முறை யோசிப்பேன். பேரம் பேசுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அடிக்கடி கைபேசியை மாற்றுவது, சந்தையில் அறிமுகமாகும் புதுக் கார்களை உடனுக்குடன் வாங்குவது என்பதில் எனக்கு ஆர்வமே இல்லை. நான் சம்பாதித்து வாங்கிய முதல் கார் இப்போதும்கூட என்னிடமே இருக்கிறது," என்கிறார் டாப்சி.

