தமிழ் நடிகைகளுக்கு கோடம்பாக்கத்தில் உரிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பது சரியல்ல என்றும் தமிழ்த் திரையுலகில் தமிழுக்கு எப்போதுமே தனி மரியாதை உள்ளது என்றும் சொல்கிறார் வாணி போஜன்.
தங்களது படங்களுக்கு தமிழ் பேசும் நடிகைகள்தான் தேவை என்று நினைக்கும் இயக்குநர்கள், அதில் சமரசம் செய்துகொள்வது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'சின்னத்திரையின் நயன்தாரா' என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் வாணி. தொலைக்காட்சித் தொடர்களில் கோலோச்சிய பிறகு திரையுலகுக்கு வந்துள்ளார். இதுவரை அவருக்கான வரவேற்பு நன்றாகவே உள்ளது.
"தமிழ்த் திரையுலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இப்போதெல்லாம் நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. பிரியா பவானி சங்கர் எனக்கு முன்பே தொலைக்காட்சி உலகில் இருந்து திரையுலகுக்கு வந்தவர். அவரை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அவருக்கு அடுத்தபடியாக எனக்கும் ஓர் அங்கீகாரம் கிடைத்துள்ளது. எங்களுடைய வழியைப் பின்பற்றி மேலும் சிலர் தயாராகி வருகிறார்கள்," என்கிறார் வாணி.
படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருப்பதாகச் சொல்பவர், வெறும் காதல் பாடல்களில் தோன்றி நடிப்பதுதான் வேலை என்றால் அந்தப் படமே தமக்குத் தேவை இல்லை என்கிறார்.
"கதை நன்றாக இருந்தாலே போதும், இயக்குநர் மீது ஒருவித நம்பிக்கை ஏற்படும். அவரிடம் ஏதோ இருக்கிறது. சொன்னபடி படத்தை எடுப்பார் என்று நினைக்கத் தோன்றும்.
"இயக்குநர்கள் தங்கள் மனதில் என்ன வைத்திருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.
"அதேசமயம் தங்கள் படத்துக்கு யார், யார் தேவை என்பது அவர்களுக்குத்தான் தெரியும். அதில் நாம் தலையிட முடியாது.
"எனவே தமிழ் பேசும் நடிகைகளுக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை என்று சொல்வது சரியல்ல.
"சில இயக்குநர்கள் தமிழ் நடிகைகள்தான் வேண்டும் என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளனர். அப்படிப்பட்ட இயக்குநர்களின் படங்களில் நானும் நடித்துள்ளேன். தமிழ் பேசத் தெரிந்த நடிகைகளுக்கு இப்போது நல்ல மரியாதையும் வரவேற்பும் கிடைத்து வருகிறது," என்கிறார் வாணி போஜன்.
ஒரே சமயத்தில் பத்து படங்களில் ஒப்பந்தமாக வேண்டும், கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தவேண்டும் என்கிற ஆசையோ, திட்டமோ தம்மிடம் இல்லை என்று குறிப்பிடுபவர், ஒரு காட்சி மட்டுமே நடித்தாலும் தாம் ஏற்கும் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கவேண்டும் என்கிறார்.
திரைப்பட இயக்குநர் ஆகவேண்டும் என்கிற ஆசை உண்டாம். ஆனால் அதுகுறித்து இப்போது பேசுவதற்கு ஒன்றும் இல்லையாம்.
"சினிமாவுக்கு வந்த பிறகுதான் இயக்கம் என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு என்பது தெரிய வருகிறது. இயக்குநர் என்பவருக்கு அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். இதை தாமதமாகத்தான் புரிந்துகொண்டேன்.
"இப்போது நடித்துக்கொண்டிருப்பதால் அதில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது எனத் தோன்றுகிறது. சில காலத்துக்குப் பின்னர் பட இயக்கம் குறித்து பேசுவதே சரியாக இருக்கும்," என்று சொல்லும் வாணி போஜன், தம்மைப் பற்றிய கிசுகிசுக்களைக் கண்டுகொள்வதே இல்லை என்கிறார்.
நேரம் இருந்தால் அவற்றைப் படித்து ரசிப்பாராம். தன் குடும்பத்தாரிடமும் கிசுகிசுக்கள் குறித்து பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
"முதன்முறையாக என்னைப் பற்றிய கிசுகிசு வெளிவந்தபோது லேசாக வருத்தப்பட்டேன். இப்போது எல்லாமே பழகிவிட்டது. கிசுகிசுக்களை ஜாலியாகவும் பொழுதுபோக்காகவும் எடுத்துக்கொள்கிறேன்," என்கிறார் வாணி.
உடற்பயிற்சி செய்வதில் இவருக்கு ஆர்வம் அதிகம். தினமும் காலை, மாலை என இரண்டு முறை யோகாசனம் செய்கிறார்.
படப்பிடிப்புக்காக வெளியூர்களுக்குச் செல்லும்போது யோகா செய்ய முடியவில்லை என வருந்துகிறார்.
"ஆனால் ஊர் திரும்பியதும் கூடுதல் நேரம் யோகா பயிற்சி மேற்கொண்டு, இழந்ததை ஈடுகட்டி விடுவேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தப் பழக்கத்தைப் பின்பற்றி வருகிறேன். இதுதான் எனது உடல்நலம், அழகின் ரகசியம்.
"மற்ற பெண்களும் இதை எளிதில் பின்பற்ற முடியும். இவ்வாறு செய்து பாருங்கள். அதன் பலன் உங்களை வியக்க வைக்கும். பெண்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தங்களது திறமையை வெளிப்படுத்த பல பெண்கள் தயங்குகிறார்கள். அந்த நிலைமையில் மாற்றம் ஏற்படும்," என்று உறுதியாகச் சொல்கிறார் வாணி போஜன்.
, :
வாணி போஜன்

