நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியுமான ரமேஷ் குடவாலா மீது தாம் அளித்துள்ள பண மோசடிப் புகார் தொடர்பான விசாரணை சரியான கோணத்தில் நடைபெற்று வருவதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
தமக்கு நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, பணம் பெற்று ரமேஷ் குடவாலா மோசடி செய்துவிட்டார் என்பது சூரியின் புகார்.
இது தொடர்பான விசாரணைக்காக நேற்று முன்தினம் சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் அலுவலகத்துக்கு வந்திருந்த சூரி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்றார்.
"நிச்சயமாக எனக்கு இந்த வழக்கில் நியாயம் கிடைக்கும். நீதிமன்றத்தையும் காவல்துறையையும் மட்டுமே நான் நம்பி இருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. காவல்துறையினர் எப்போது அழைத்தாலும் நேரில் முன்னிலையாகி விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறேன்," என்றார் சூரி.
தன் தந்தை விஜய குமாருடன் மீண்டும் சேர வேண்டும் என்பதே தமது விருப்பம் எனக் கூறியுள்ளார் வனிதா விஜயகுமார். குடும்பம் என்றால் சச்சரவு இருக்கத்தான் செய்யும் என்றும் அதை மீறி குடும்பத்தார் ஒன்றுசேர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "அப்பா மீது எனக்கு எப்போதுமே மிகுந்த பாசம் உண்டு. ஒரு முறை எனக்காக அப்பாவி டம் அவருக்கு நெருக்கமான நண்பர் என்ற வகையில் ரஜினிகாந்த் பேசிப் பார்த்தார். ஆனால் அப்பா சமாதானம் அடையவில்லை. அவர் என்னை ஏற்றுக்கொள்ளும் நாள் வரும். அதற்காகக் காத்திருப்பேன்," என்கிறார் வனிதா விஜயகுமார்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு வின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. வினய் சந்திரா இயக்குகிறார். கவிஞரான சரோஜினி நாயுடு, 'இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்பட்டார். இதில், சரோஜினி நாயுடுவாக நடிகை பானுபிரியாவின் சகோதரி நிஷாந்தி நடிக்கிறார். தமிழில் 'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'ஒன்று எங்கள் ஜாதியே' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இவர்.

