திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
5e0d0d04-2d65-4edf-a64d-f6f700c6bacd
-
multi-img1 of 3

 கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, திரையுலகினர் வெளிநாடுகளுக்குப் பறப்பதில் ஆர்வமாக உள்ளனர். நடிகை ஜனனி தனது பிறந்தநாள் கொண்டாட்டத் துக்காக தாய்லாந்து சென்றுள்ளார். மார்ச் 31ஆம் தேதி அவருக்குப் பிறந்தநாள். கடந்த ஆண்டு பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடினார். தற்போது 'வீழம்', 'பகீரா', 'யாக்கைத் திரி', 'முன்னறிவான்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருபவர், தாய்லாந்தில் யானைகளை வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளதாக சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படத்தின் புதிய சுவரொட்டி வெளியாகி உள்ளது. கமல் கோபமாகக் காட்சியளிக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ள அச்சுவரொட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் 'விக்ரம்' படத்தின் தமிழகத் திரைப்பட விநியோக உரிமையை நடிகர் உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. தமிழ்த் திரையுலகின் பெருமை மிக்க படங்களில் ஒன்றாக உருவாகும் 'விக்ரம்' படத்துடன் இணைவதில் மகிழ்ச்சி அடைவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் முழுவதும் அடிதடி, அதிரடிக் காட்சிகள் நிறைந்திருக்கும் என்றும் கமல் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் கூறப்படுகிறது.

 பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தில் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள மமிதா பைஜு நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். அதில் அவருக்கு கிராமத்து இளம்பெண் வேடமாம். இதையடுத்து படக்குழுவினர் மமிதாவை வரவேற்கும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

"இளமையும் திறமையும் கொண்ட மமிதா எங்களுடன் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சி. உங்களை வரவேற்கிறோம்," என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சூர்யாவின் சொந்தப்படத் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

இயக்குநர் பாலா மிகவும் கண்டிப்பானவர் என்று சிலர் மமிதாவிடம் கூறியுள்ளனர். ஆனால், அதற்கு நேர்மாறாக பாலா மிக நட்புடன் பேசுவதாகச் சொல்கிறார் மமிதா.

"தேசிய விருது பெற்ற இயக்குநரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எளிதில் அமையாது. அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி," என்றும் கூறுகிறார்.