லாஸ்வேகஸ் நகரில் நடைபெற்ற கிராமி இசை விருதுகள் வழங்கும் விழாவில் ஏ.ஆர்.ரகுமான் தன் மகன் அமீனுடன் கலந்துகொண்டார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் சமூக ஊடகங்களில் வெளியிட, ஆயி ரக்கணக்கானோர் அவற்றைப் பரவலாகப் பகிர்ந்தனர்.
ரகுமானும் கிராமி விருது பெற்றவர்தான். நேற்று நடைபெற்ற விருது நிகழ்ச்சியின்போது தன் மகனுடன் எடுத்துக்கொண்ட 'செல்ஃபி' படத்தை முதலில் பகிர்ந்துகொண்டவர், பார்வையாளர்கள் மத்தியில் தாம் அமர்ந்திருப்பது போன்ற படத்தையும் மற்றொரு பதிவில் வெளியிட்டார்.
மேலும், தன் மகனுடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படும் பகுதியில் நின்றபடி எடுத்துக்கொண்ட படத்துக்கு, 'குழந்தை வளர்ப்பு' என்று அவர் நகைச்சுவையாக குறிப்பு கொடுத்துள்ளார்.
இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்தப் படங்களுக்குப் பின்னூட்டமிட்டுள்ள பலரும், ரகுமான் மகன் எளிமையான தோற்றத்துடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பலர் உலகப் புகழ்பெற்ற 'பிடிஎஸ்' இசைக்குழுவுடன் இணைந்து ரகுமான் பணியாற்ற வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். அத்தகைய வாய்ப்பு அமையுமா என்றும் சிலர் கேட்டிருந்தனர். இதற்கு அவர் பதில் ஏதும் அளிக்கவில்லை.

