அமைதி திலகம் என்று நடிகை 'கயல்' ஆனந்தியை தயக்கமின்றிக் குறிப்பிடலாம். அந்த அளவுக்கு அமைதியானவர், மிகுந்த பொறுமைசாலி என்று கோடம்பாக்கத்தில் பெயர் வாங்கி உள்ளார்.
திருமணத்துக்குப் பிறகு தமக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவருவது உற்சாகம் அளிப்பதாகவும் தரமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருவதாகவும் அண்மைய பேட்டியில் இவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனந்தி இப்போது நடித்து வரும் படம் 'நதி'. தாமரைச் செல்வன் இயக்குகிறார்.
மதுரையில் முதற்கட்டப் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். அங்குள்ள பரபரப்பான வீதிகளில் காட்சிகளைப் படமாக்கியபோது பெருந்திரளாக ரசிகர்கள் கூடிவிட்டனராம். அப்போது ஏற்பட்ட அனுபவங்களை விவரித்துள்ளார் ஆனந்தி.
"இதுபோன்ற வெளிப்புறப் படப்பிடிப்புகளின் போதுதான் சினிமா என்பது எவ்வளவு சக்தி வாய்ந்த ஊடகம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. திரையுலகக் கலைஞர்கள் மீது ரசிகர்கள் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டிருக்கிறார்கள். மதுரையில் ரசிகர்களின் அன்பு என்னைத் திக்குமுக்காட வைத்தது.
"நான் தங்கியிருந்த தங்குவிடுதியில் இருந்து காலை ஐந்து மணிக்கு படிப்பிடிப்புக்காக வெளியே கிளம்புவேன். அந்த நேரத்திலும்கூட ஏராளமான ரசிகர்கள் எனக்காகக் காத்திருப்பார்கள். அதிலும், பலர் குடும்பமாக வந்திருப்பதைப் பார்த்து பலமுறை வியந்துபோயிருக்கிறேன்.
"படப்பிடிப்பு நடக்கும் இடத்திலும் தினமும் நூற்றுக்கணக்கானோர் காத்திருந்தனர். நான் எனது கேரவேனில் இருந்து இறங்கினால் போதும், உடனே கைதட்டி ஆரவாரம் செய்வார்கள்.
"படப்பிடிப்புக்காக வெவ்வேறு இடங்களுக்குச் செல்லும்போதும் விடமாட்டார்கள். ஏராளமானோர் எங்களைப் பின்தொடர்வது வாடிக்கையாக இருந்தது.
"இதன் மூலம் கலைஞர்கள் மீது தமிழ் மக்கள் எந்த அளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை என்னால் உணர முடிந்தது. இது நிபந்தனையற்ற ஆதரவு என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்," என்கிறார் ஆனந்தி.
மதுரையில் சுட்டெரிக்கும் வெயிலில் படப்படிப்பை நடத்தியதால், வெப்பம் தாங்க முடியாமல் அவதிப்பட்டாராம். இருப்பினும் வேடிக்கை பார்க்கக்கூடிய ரசிகர்கள் அவ்வப்போது குரல் எழுப்பி உற்சாகப்படுத்தியதால், சோர்வை மீறி நடிக்க முடிந்ததாம்.
அது மட்டுமல்ல. 'நதி' படத்துக்காக ஒரு பேருந்தின் மீது ஏறி நின்று நடனமும் ஆடியுள்ளார் ஆனந்தி.
"ஒரு பாடல் காட்சிக்காக இவ்வாறு நடனமாட வேண்டியிருந்தது. இயக்குநர்கூட சற்று பயந்தார். ஆனால் நான் துணிச்சலுடன் நடனமாடினேன்.
"பொதுவாக நான் அமைதியான பெண்தான். அதேசமயம் சாகச முயற்சிகளில் ஈடுபடுவது, அபாயகரமான விஷயங்களைச் செய்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. இது பலருக்கும் தெரியாது.
"பேருந்து நடனக் காட்சிக்காக ஒருமுறை ஒத்திகை பார்த்தோம். அதன் பிறகு கச்சிதமாக நடித்து முடித்தேன். எனினும் இவ்வாறு நடனமாடுவது அவ்வளவு எளிதல்ல. கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் நமது முயற்சி ஆபத்தில் முடிந்துவிடும்.
"ஓடும் பேருந்தில் நடனமாடும்போது அதன் மையப் பகுதியில் நிற்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். பேருந்தின் ஓரப் பகுதிக்குச் செல்லக்கூடாது. இயக்குநர் சொல்வது மட்டுமே உங்கள் காதில் ஒலிக்க வேண்டும். வேறு எதிலும் கவனம் செலுத்தக்கூடாது.
"இதையெல்லாம் கவனத்தில் கொண்டு நடித்து முடித்தேன். இந்தப் பேருந்து நடனம் ரசிகர்களால் நிச்சயம் பாராட்டப்படும். இதற்காக படக்குழுவில் இருந்த அனைவரும் என்னைப் பாராட்டினர்," என்கிறார் ஆனந்தி.
தமிழ் சினிமா உலகில் சம்பள விஷயத்தில் கறார் காட்டாத ஒருசில நடிகைகளில் இவரும் ஒருவர்.
படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறார், நடிப்பில் கவனம் செலுத்தவில்லை என்பன போன்ற எந்த புகார்களுக்கும் ஒருமுறைகூட ஆனந்தி ஆளானது இல்லை.

