மலையாளத்தில் வெளிவந்து வரவேற்பைப் பெற்றுள்ள 'ஜோசப்' திரைப்படத்தை தமிழில் 'விசித்திரன்' என்ற தலைப்பில் மறுபதிப்பு செய்கின்றனர்.
இதை இயக்குநர் பாலா தயாரிக்கிறார் என்பதால் கோடம்பாக்கத்தின் கவனம் இந்தப் படத்தின் பக்கம் திரும்பியுள்ளது. ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கிறாா்.
இந்நிலையில், பாலா சொல்லித்தான் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டதாகச் சொல்கிறார் ஆர்.கே.சுரேஷ்.
"எனக்கு மலையாளப் படங்கள் ரொம்பப் பிடிக்கும். சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளேன்.
"மலையாளத்தில் வெளியான 'ஜோசப்' படத்தில் ஜோஜு ஜார்ஜ் அருமையாக நடித்துள்ளார். அந்தப் படத்தைப் பார்த்து ரசித்தபோது, அதை தமிழில் மறுபதிப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்படவில்லை.
"அந்தச் சமயத்தில் 'அமீரா' படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் சீமான் அண்ணனிடம் 'ஜோசப்' படத்தைப் பார்த்ததாகவும் அதன் தாக்கத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை என்றும் சொன்னேன். தானும்கூட அந்தப் படம் குறித்து கேள்விப்பட்டதாகச் சொன்ன அவர், 'அதுபோன்ற ஒரு படத்தில் நீ நடிக்க வேண்டும் தம்பி' என்றார். அதன்பிறகு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. உடனடியாக கேரளா சென்று படத்தின் மறுபதிப்பு உரிமையை வாங்கினேன்.
"பின்னர் ஒருநாள் இயக்குநர் பாலாவைச் சந்திக்க வேண்டி இருந்தது. அப்போது அவரிடம் மறுபதிப்பு உரிமையை வாங்கியதைக் குறிப்பிட்டு, அவருடைய நிறுவனத்தின் சார்பாக தமிழ் மறுபதிப்பைப் படமாக்கலாமா என்று கேட்டேன். மறுநாளே அந்தப் படத்தைப் பார்த்தவர், தாமே தயாரிக்க முன்வந்தார்," என்கிறார் ஆர்.கே.சுரேஷ்.
விஜய் சேதுபதி நடித்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் இவரது எண்ணமாக இருந்ததாம். ஆனால் பாலாவோ, 'நீயே நடித்துவிடு. பொருத்தமாக இருக்கும்' என்று கூறிவிட்டாராம்.
"அவரே சொல்லிவிட்ட பிறகு யார் மாற்ற முடியும். உடனடியாக ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் பத்மகுமார் என்று மற்ற கலைஞர்களையும் அவரே ஒப்பந்தம் செய்துவிட்டார். இந்தப் படத்துக்காக சுமார் 113 கிலோ வரை எடையை அதிகரித்துள்ளேன். தொப்பை மட்டுமே ஏழெட்டு கிலோ இருக்கும். அதன் பிறகு மீண்டும் உடல் எடையைக் குறைத்து 'ஃபிளாஷ்பேக்' காட்சிகளில் நடித்தேன்.
"இந்தப் படத்தில் மூன்று விதமான தோற்றங்களில் என்னைப் பார்க்க முடியும். எந்தப் படத்துக்காகவும் நான் இந்த அளவுக்கு உழைத்ததில்லை," என்கிறார் ஆர்.கே.சுரேஷ்.


