விஜய் ஆண்டனி நடித்து வரும் 'கொலை' படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியை (படம்) வெளியிட்டுள்ளனர்.
கடந்த 1923ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொலைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி வருகிறது இப்படம்.
'விடியும் முன்' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த பாலாஜி குமார் இயக்கி உள்ளார்.
விஜய் ஆண்டனியுடன் ரித்திகா சிங், ஜான் விஜய், ராதிகா சரத்குமார், முரளி சர்மா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
"கடந்த 1923ல் டோரதி கிங் என்ற மாடல் அழகி ஒருவர் கொலை செய்யப்பட்டார். அந்தச் சம்பவத்தையே கதைக்கருவாகக் கொண்டு, விறுவிறுப்பான திரைக் கதையை அமைத்துள்ளோம். ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை மிரள வைக்கும்.
"அந்தக் கொலைச் சம்பவம் உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தக் கொலையின் பின்னால் உள்ள மர்மத்தை அறிய உலகம் துடித்தது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதை விவரித்துள்ளோம்.
"அன்று நடந்த கொலைச் சம்பவத்தை நவீன கால பின்னணிக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டியது இருந்தது. அது சவாலான பணி என்றாலும் கச்சிதமாகச் செய்து முடித்தோம்.
"கதைப்படி, லீலா என்ற மாடல் அழகி கொல்லப்படுகிறார். அவரது நண்பர்களில் ஐந்து பேருக்கு அவர் இறந்தால் பலன் இருக்கிறது. அதில் கொலையாளி யார் என்பதை துப்பறியும் நிபுணர் விஜய் ஆண்டனி கண்டுபிடிக்கிறார். இதை திரையில் பார்க்கும்போது சுவாரசியமாக இருக்கும். படம் குறித் நேரத்தில் வெளியீடு காணும்," என்கிறார் இயக்குநர் பாலாஜி.

