அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கும் 'கோப்ரா' படத்தில் அவரது ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ரீநிதி ஷெட்டி. படம் இன்னும் வெளியாகாவிட்டாலும் தமிழ் ரசிகர்களுக்கு இவரை நன்கு தெரிந்திருக்கும்.
'கேஜிஎஃப்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். முதல் படத்தின் பிரம்மாண்ட வெற்றி இவரை நாடு முழுவதும் உள்ள திரை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்துள்ளது.
உலக அளவில் பெயர் வாங்கியுள்ள மாடல் அழகி, நடிகை, மண் வளம் குறித்து பிரசாரம் மேற்கொள்ளும் சமூக ஆர்வலர் என்று ஸ்ரீநிதி பல்வேறு விஷயங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு, பரபரப்பாக வலம் வருகிறார்.
'கேஜிஎஃப்' படத்தின் இரண்டாம் பாகம் வெளியான பிறகுதான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என முடிவு செய்திருந்தாராம். ஆனால் 'கோப்ரா' படத்தின் கதையும் அதில் தனக்கான கதாபாத்திரத்தின் தன்மையும் மனதை மாற்றிவிட்டதாகச் சொல்கிறார்.
"கடந்த 2016ஆம் ஆண்டு என்னுடன் திரையுலகில் அறிமுகமான மற்ற நடிகைகள் எல்லாம் பத்து படங்களில் நடித்து முடித்துள்ளனர். நான் மட்டும் இரண்டு படங்களில்தான் நடித்திருக்கிறேன். இந்தக் கவலை எனக்குள்ளும் எழுந்தது.
"ஆனால் ஒரு விஷயத்தை மறந்துவிடக்கூடாது. ஒருவேளை கன்னடம், தெலுங்கில் நானும் பத்து படங்களில் நடித்திருந்தாலும்கூட இந்தளவுக்கு புகழ் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். 'கேஜிஎஃப்' என்ற ஒற்றைப் படம் என்னை இந்திய அளவில் அறியப்பட்ட நடிகையாக மாற்றியுள்ளது. அதனால் ஆறு ஆண்டுகளில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்திருக்கிறோம் என்ற கவலையோ, அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடிக்கவில்லை என்ற வருத்தமோ எனக்கு அறவே இல்லை," என்கிறார் ஸ்ரீநிதி.
சிறு வயது முதலே இவர் விக்ரமின் தீவிர ரசிகையாம். விக்ரம் நடித்துள்ள அனைத்து படங்களையும் ஒன்றுவிடாமல் பார்த்துள்ளாராம்.
'கோப்ரா' படத்தில் இவரை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு, தாம் இயக்கியுள்ள இரண்டு படங்களையும் பார்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் அஜய் ஞானமுத்து.
"ஒரே நாளில் இரண்டு படங்களையும் பார்த்து முடித்தேன். காட்சி அமைப்பு, கதாபாத்திரங்கள் என அனைத்து வகையிலும் அசத்தி இருந்தார் அஜய். அவர் திறமையான இயக்குநர் என்பதை உணர்ந்துகொண்டேன்.
"'கோப்ரா' படத்தில் என்னை இன்னும் அழகாக, குடும்பப்பாங்காக காட்டியிருக்கிறார். அதற்காக நன்றி தெரிவிக்கிறேன். இந்தப் படம் இந்திய அளவில் வெளியீடு காண வேண்டிய படைப்பு. விக்ரம் ஏழுவிதமான தோற்றங்களில் வந்து போவார். ஒவ்வொரு தோற்றமும் வித்தியாசமாக, அதேசமயம் ரசிகர்களை மிரள வைக்கும் வகையில் இருக்கும்.
"ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசைக்கு ஈடு இணையே இல்லை. இந்தப் படத்துக்காக கடும் உழைப்பைக் கொடுத்திருக்கிறார். இவ்வளவு சீக்கிரத்தில் ரகுமான் இசையில் நடிப்பேன் என்று கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை," என்று உற்சாகத்துடன் பேசுகிறார் ஸ்ரீநிதி.
மாடலிங் உலகில் ஸ்ரீநிதிக்கு இப்போதும் பெரும் வரவேற்பு உள்ளது. உலக அளவில் மாடலிங் அழகிகளுக்கான போட்டியில் பங்கேற்ற அனுபவம் உள்ளவர். இந்திய அளவில் மிகச்சிறந்த 'மாடல்' அழகியாக தேர்வு பெற்றவர்.
படப்பிடிப்பு, மாடலிங் நிகழ்வுகளுக்கு மத்தியில் 'மண் வளம் காப்போம்' என்ற இயக்கத்துக்காக பிரசார குறும்படங்களிலும் நடித்துள்ளார். மண் வளத்தை காக்கும் பொறுப்பும் கடமையும் அனைவருக்கும் உள்ளது எனப் பொறுப்புடன் பேசுகிறார்.
"நாடு முழுவதும் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி உள்ளது. விளை மண், தன்னுடைய வளத்தையும் அதன் இயல்பான தன்மையையும் இழந்துகொண்டே வருகிறது. நம் நாட்டில் மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான நாடுகள் இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன.
"உலக வெப்பமயமாதல் குறித்து பலருக்குத் தெரியவில்லை. திடீர் வெள்ளம், மண் சரிவு என பல பிரச்சினைகள் மண்ணின் வளத்தை மேலும் பாதிக்கின்றன.
"மிக முக்கியமான இந்தப் பிரச்சினையை 'சேவ் சாயில்' என்கிற இயக்கம் மூலம் ஏராளமானோர் ஒருங்கிணைந்து எதிர்கொண்டுள்ளனர். அவர்களில் நானும் ஒருத்தி," என்கிறார் ஸ்ரீநிதி ஷெட்டி.
'பீஸ்ட்', 'கேஜிஎஃப்' ஆகிய இரு படங்களும் கிட்டத்தட்ட ஒருசேர வெளியாகின்றன. இதனால் அடுத்த ஒரு வாரத்துக்கு திரையரங்குகளில் ரசிகர் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கலாம். இரு படங்களையும் சூட்டோடு சூடாக பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாகச் சொல்கிறார் ஸ்ரீநிதி.

