திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read

 கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகிய இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியீடு காண உள்ளன.

கார்த்தி நடித்து வரும் 'சர்தார்' எதிர்வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 'SK20' என்று தற்காலிகமாக குறிப்பிடப்படும் சிவாவின் புதிய படமும் அதே தேதியில்தான் வெளியாகிறது. இருவரது படங்களும் முதல் முறையாக திரையில் மோத உள்ளன. இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒருசேர வெளியீடு காண்கின்றன.

 இணையத் தொடர்களில் நடிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார் தான்யா ரவிச்சந்திரன். திரைப் படங்களைப் போலவே இந்தத் தொடர்களையும் ரசிகர்கள் விரும்பிப் பார்ப்பதாகவும் இதனால் பலருக்கு வேலை வாய்ப்புக் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது கிருத்திகா இயக்கும் 'பேப்பர் ராக்கெட்' தொடரிலும் உதயநிதி யுடன் 'நெஞ்சுக்கு நீதி' படத்திலும் நடித்து வருகிறார் தான்யா.

 விளம்பரப் படம் ஒன்றில் ஆட்டோ ஓட்டுநராகத் தோன்றுகிறார் சிம்பு. இதற்கான படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இது தொடர்பான காணொளிப் பதிவும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன. முதலில் ஆட்டோ ஓட்டுநராக சிம்பு காட்சி அளிப்பதைக் கண்ட ரசிகர்கள், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில்தான் அவர் இவ்வாறு தோன்றுவதாகக் கருதினர். பிறகு சிம்பு தரப்பில் அது விளம்பரப் படம் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

 அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் 'பீஸ்ட்' படம் திரையரங்க முன்பதிவு மூலமாகவே பல கோடி ரூபாயை குவித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் முன்பதிவு மூலம் இதுவரை 3.5 லட்சம் டாலர்கள் வசூலில் கிடைத்துள்ளதாம்.

 'பீஸ்ட்' திரைப்படம் தமிழில் முன்பு வெளியான 'கூர்கா' படத்தின் தழுவலைப்போல் உள்ளதா என்ற கேள்விக்கு, பதிலளிக்க நடிகர் யோகி பாபு மறுத்துவிட்டார்.

மாறாக, 'பீஸ்ட்' உள்ளிட்ட விஜய் நடித்த அனைத்துப் படங்களுமே வெற்றிப் படைப்புகள்தான் என்று அவர் பதிலளித்தார். 'கூர்கா' படத்தில் யோகி பாபுதான் நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 'விக்ரம்' படம் தொடர்பாக அதன் நாயகன் கமல்ஹாசன் எந்த விதத்திலும் தலையிடவில்லை என்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். "இது உன்னுடைய படம். எனவே, என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்," என்று தமக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 தற்போது சுராஜ் இயக்கத்தில் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் வடிவேலு, நான்கு புதிய படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். மாரி செல்வராஜ் படத்தில் அரசியல்வாதியாக நடிக்கிறாராம். நெல்சன் இயக்கும் ரஜினிகாந்த் படத்தில் முழுநீள நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார்.

கௌதம் மேனன் இயக்கும் புதுப் படத்திலும் வடிவேலு வைக் காண இயலும். இதனால் நகைச்சுவைப் பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.