'ஹன்சிகா என்றால் உற்சாகம்'

'ஹன்சிகா என்றால் உற்சாகம்'

3 mins read
386fb844-d478-4ee1-a2ef-6fab48a2cdeb
-

ஹன்­சி­கா­வைப் போல் உற்­சா­க­மான, திற­மை­யான கதாநாயகி கிடைப்­பது அரிது என்­கி­றார் இயக்­கு­நர் மனோஜ் தாமோ­த­ரன். இவ­ரது இயக்­கத்­தில் உரு­வாகி உள்ள 'பார்ட்­னர்' படத்­தில் ஹன்­சி­கா­தான் நாயகி.

மும்­பை­யில் இருந்த ஹன்­சி­காவை நேரில் சந்­தித்து கதையை விவ­ரித்­தா­ராம். சில சந்­தே­கங்­களை எழுப்­பி­ய­வர், அவற்­றுக்­கான விளக்­கம் கிடைத்த நிமி­டமே நடிக்­கத் தயார் என்று கூறி­யுள்­ளார்.

"தாய்­மொ­ழி­யில் நடிப்­பது எளிது. ஏற்­றுக்­கொண்ட கதா­பாத்­தி­ரத்­தின் தன்­மையை உணர்ந்து யதார்த்­த­மான, மிகை­யில்லா நடிப்பை வெளிப்­படுத்த முடி­யும். பிற­மொ­ழி­களில் நடிக்­கும்­போது இந்த சௌக­ரி­யம் கிடைக்­காது.

"ஆனால் ஹன்­சி­கா­வைப் பொறுத்­த­வ­ரை­யில் எந்த மொழி­யாக இருப்­பி­னும் தமது கதா­பாத்­தி­ரத்தை உள்­வாங்கி நடிப்­பார். இது­தான் அவ­ரது தனித்­து­வம்.

"படப்­பி­டிப்பு அரங்­குக்­குள் நுழை­யும்­போதே அவ­ரி­டம் ஒரு­வித உற்­சா­கம் காணப்­படும். மிக­வும் ஜாலி­யா­கப் பணி­யாற்­று­வார்.

"அவ­ரைப் பார்க்­கும்­போது ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வுக்கு ஒரு­வி­தப் புத்­து­ணர்ச்சி கிடைத்­து­வி­டும். இயக்­கு­நர் என்ன எதிர்­பார்க்­கி­றாரோ, அதற்­கேற்ப நடிப்­ப­தில் அவர் கெட்­டிக்­கா­ரர்," என்­கி­றார் இயக்­கு­நர் மனோஜ்.

உடன் நடிக்­கும் கலை­ஞர்­க­ளுக்கு அதிக வாய்ப்பு அளிக்­கப்­பட வேண்­டும் என அடிக்­கடி சொல்­வா­ராம் ஹன்­சிகா.

மேலும், அனை­வ­ரு­ட­னும் நட்­பா­கப் பேசிப் பழ­கு­வார் என்ற நல்ல பெய­ரை­யும் சம்பாதித்­துள்­ளார்.

"திரை­யு­ல­கில் ஐம்­பது படங்­க­ளுக்­கும் மேல் நடித்­துள்ள பெரிய நடிகை என்­ற­போ­தி­லும் அவ­ரி­டம் வீண் பந்தா எது­வும் இருக்­காது. அவ­ரு­டைய உண்­மை­யான சுபா­வமே எளி­மை­தான்.

"தொடர்ந்து தனது திறமையை வெளிப்­ப­டுத்தி வந்­த­தால்­தான் இன்­ற­ள­வும் அவ­ரால் தாக்­குப்­பி­டிக்க முடி­றது.

"இந்­தப் புதிய பட­மும் அதில் ஹன்­சி­கா­வின் நடிப்பும் ரசி­கர்­க­ளால் நிச்சயம் பேசப்­படும். கார­ணம், இதில் கல்­யாணி என்ற கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுக்­கொண்டு, அதற்காக கடு­மை­யாக உழைத்­துள்­ளார்.

"ஒவ்­வொரு காட்­சி­யி­லும் அவ­ரது முழுத் திற­மையை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான வாய்ப்பு அளிக்­கப்­பட்டு இருந்தது," என்­கி­றார் மனோஜ்.

ஹன்­சி­கா­வின் நகைச்­சுவை உணர்வு தம்மை ஆச்­ச­ரி­யப்­பட வைத்­த­தா­கச் சொல்­ப­வர், அவ­ரது நகைச்­சுவை உணர்­வுக்கு ஏற்ற தீனியை இது­வரை தமிழ் இயக்­கு­நர்­கள் அளிக்­க­வில்லை என்­கி­றார்.

"நான் சொல்­வது எந்த அள­வுக்கு உண்மை என்பதைப் படம் பார்க்­கும்­போது உணர்­வீர்­கள். அவ­ரது நகைச்­சு­வை­யா­கப் பேசு­வது, நடிப்­பது எல்­லாமே கச்­சி­த­மாக இருக்­கும்.

"காலை­யில் படப்­பி­டிப்பு தொடங்­கும் முன்பு, சின்­னச்­சின்ன தக­வல்­கள், சந்­தே­கங்­க­ளைக் கேட்­பார். அவற்­றுக்­கான விளக்­கங்­களை அளித்­தால்­போ­தும், ஆறு பந்­து­களும் சிக்ஸ்­ச­ருக்­குப் பறந்த உற்­சா­கம் நமக்­கும் ஏற்­படும்," என்­கி­றார் மனோஜ்.

'மகா' திரைப்­ப­டம் விரை­வில் வெளி­யீடு காண உள்ள நிலை­யில், ஹன்­சிகா நடித்­துள்ள மூன்று படங்­கள் தமி­ழி­லும் தெலுங்­கி­லு­மாக வெளி­யீடு காண உள்­ளது.

அத­னால் ஹன்­சிகா தரப்­பில் உற்சா­கம் நில­வு­கிறது.

இதற்­கி­டையே, தனி நாய­கி­யாக நடிப்­ப­தற்கு அவர் முன்னு­ரிமை அளிக்­கத் தொடங்கி உள்­ளார்.

குறிப்­பாக, பாலி­யல் வன்­கொ­டுமை அல்­லது பெண்­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் விவ­கா­ரங்­கள் என்­றால் உடனே கால்­ஷீட் தர அவர் தயா­ரா­கத் தக­வல்.

"திரை­யு­ல­கம் வேக­மாக மாறி வரு­கிறது. இனி குறிப்­பிட்ட ஒரு தரப்­பி­ன­ரின் ஆதிக்­கம் மட்­டுமே நீடிப்­பது சாத்­தி­யம் அல்ல.

"எல்­லோ­ருக்­கும் போது­மான வாய்ப்பு கிடைத்து வரு­கிறது. ஒரு­வ­ரு­டைய வாய்ப்பை மற்­றொ­ரு­வர் பறித்­து­விட முடி­யாது. அதற்­கான அவ­சி­ய­மும் இல்லை. கார­ணம், படைப்­பு­க­ளின் எண்ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது. இப்­போது ஏராளமான இளை­யர்­கள் புது­மை­யான கதைக்­க­ளங்­களு­டன் தங்­கள் படைப்­பு­கள் உரு­வாக்கி வரு­கின்­றனர். அவர்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்ற ஆசை," என்கி­றார் ஹன்­சிகா.

அறி­முக இயக்­கு­ந­ராக இருந்­தா­லும் வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளம் என்­றால் எத்­தனை நாள்­கள் வேண்­டு­மா­னா­லும் கால்­ஷீட் தர ஹன்­சிகா தயார். கதை உள்­ள­வர்­கள் அவரை நிச்­ச­ய­மாக நம்­ப­லாம் என்­கிறது அவ­ரது தரப்பு.