'பிக்பாஸ்' வெற்றியாளரான மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ் நடிப்பில் உருவாகும் படம் 'மதில் மேல் காதல்'. இப்படத்தின் குறு முன்னோட்ட காட்சித் தொகுப்பு அண்மையில் இணையத்தில் வெளியானது. இதையடுத்து சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் அதைக் கண்டு ரசித்துள்ளனர். அஞ்சலி கான் இயக்கும் இப்படம் முழு நீள காதல் படைப்பாக உருவாகிறதாம். இதற்கிடையே, ஹன்சிகா மோத்வானியுடன் இணையத்தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் முகேன் ராவ்.
வெற்றிமாறனை போல் தம்மால் கனமான, அதிரடியான கதாபாத்திரங்களை உருவாக்க முடியவில்லை என்கிறார் ராஜமௌலி. மேலும், வெற்றிமாறன் இயக்கியுள்ள படங்களுக்கு இணையான படைப்புகளை தம்மால் இதுவரை தர முடியவில்லை என்றும் குறிப்பிட்டுப் பாராட்டி உள்ளார். இதனால் வெற்றிமாறனின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ள படத்துக்கு 'மார்க் ஆண்டனி' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் விஷால், எஸ்.ஜே. சூர்யா ஆகிய இருவருமே இரட்டை வேடங்களில் நடிக்கின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தை 'மினி ஸ்டுடியோ' நிறுவனம் தயாரிக்கிறது. எஸ்.ஜே.சூர்யா தான் வில்லன் என்பது சொல்லாமலேயே தெரிந்திருக்கும். இது 1960களில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் படம். ரஜினியின் 'பாட்ஷா' படத்தில் வில்லனாக நடித்த ரகுவரனின் பெயர் மார்க் ஆண்டனி.

