கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த இந்தித் திரையுலகில் முன்னணி கலைஞர்களான நடிகர் ரன்பீர் கபூரும் நடிகை ஆலியா பட்டும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் திருமணம் முடிந்த கையோடு, டுவிட்டரில் அது குறித்துப் பதிவிட்டார் ரன்பீர் கபூர். அதில், தங்கள் பெற்றோர், குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் திருமணம் நடந்தது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
"கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்கள் நேரத்தைச் செலவிட்ட பால்கனியில் இருவரும் திருமணம் செய்துகொண்டோம். எங்கள் வாழ்க்கையில் இந்த முக்கியமான நேரத்தில் நீங்கள் காட்டிய அன்புக்கு நன்றி. இது இந்த தருணத்தை மேலும் சிறப்பானதாக்கி உள்ளது," என்று பதிவிட்டுள்ளார் ரன்பீர் கபூர்.
ஆலியா பட் கடைசியாக திருமணத்துக்கு முன்பு நடித்த 'ஆர்ஆர்ஆர்', 'கங்குபாய்' ஆகிய படங்கள் அண்மையில் வெளியாகின.
கடந்த 2019ஆம் ஆண்டே இவர்களது திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா நெருக்கடியால் தள்ளிப்போனது.
நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட இந்தித் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்த நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.