திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read

 விளம்பரப் படம் ஒன்றில் நடித்தமைக்காக நிதி அகர்வாலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

'பணத்துக்காக இப்படி செய்யலாமா' என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த விளம்பரத்தில், அவர் சற்றே கவர்ச்சியாகக் காட்சியளிக்கிறார்.

ரசிகர்களின் எதிர்ப்பு குறித்து அறிந்ததும், தாம் விளம்பரம் என்கிற கோணத்தில் மட்டுமே பார்த்ததாகவும் தமக்குத் தவறாகத் தோன்றவில்லை என்றும் நெருக்கமானவர்களிடம் புலம்புகிறாராம் நிதி.

இதற்கிடையே, அவர் புதுப் படங்கள் எதிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் நிதிக்கும் நடிகர் சிம்புவுக்கும் விரைவில் திருமணம் நடக்க வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

 கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நேப்பாளத்துக்குச் சென்றுள்ளார் அமலா பால். அங்கு குளுகுளு என்று இருக்கும் மலைத்தொடர்களில் சுற்றித்திரிந்து, கண்ணுக்குத் தெரியும் அழகான இயற்கையை தனது கேமராவில் படம்பிடித்துள்ளார்.

அவற்றுள் சில படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டதுடன், 'இது வெறும் விடுமுறைப் பயணம் மட்டுமே' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"மலையோரம் நடந்து செல்வது, அமைதியான சூழலில் புத்தகங்கள் படிப்பது, வாய்ப்பு அமைந்தால் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடுவது என்று ஒவ்வொரு நொடியையும் இங்கு மகிழ்ச்சியாக அனுபவிக்கிறேன்," என்று தமது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார் அமலா பால்.

ஆனால், மணமுறிவுக்குப் பின்னர் ஆன்மிக விஷயங்களில் கவனம் செலுத்தி வந்த அமலா, இப்போதும் அது தொடர்பான காரணத்துக்காகவே நேப்பாளம் சென்றிருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.

 தமது உள்ளாடைகளின் அளவு என்ன என்று வக்கிர மாகக் கேள்வி எழுப்பிய ஒருவருக்குத் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர் (படம்). மார்பகங்கள் என்பன வேற்றுக்கிரகத்தில் இருந்து தாம் பெற்று வந்தவை அல்ல என்றும் கேள்வி எழுப்பியவரின் குடும்பங்களில் உள்ள பெண் களுக்கும் தமது இந்த விளக்கம் பொருந்தும் என்றும் நெற்றிப்பொட்டில் அடித்தாற் போல் பதில் கூறியுள்ளார் பிரியா. இதேபோல் மற்றொருவர் எழுப்பிய கேள்விக்கு, "இணையத்தில் குண்டர்களைப் போல் செயல்படுபவர்களை, சில வார்த்தைகளைக் கொண்டு திருத்த இயலாது. அவர்களைப் பற்றி நான் பொருட்படுத்து வதே இல்லை," என்று பிரியா பவானி சங்கர் மேலும் தெரிவித்துள்ளார். பிரியாவின் இந்த துணிச்சலை இணையவாசிகள் பலரும் பாராட்டி உள்ளனர்.

 சூர்யா, கார்த்தி ஆகிய இருவரது ரசிகர் மன்றங்களும் ஒன்றாகவே இயங்கி வந்தன. இருவரும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகின்றனர். சூர்யா 'அகரம்' என்ற பெயரிலும் கார்த்தி 'உழவன்' என்ற பெயரிலும் அறக்கட்டளை தனித்தனியே நடத்தி வரும் நிலையில், தங்களது ரசிகர் மன்றங்களையும் பிரித்துள்ளனர். இருவரும் அதிக படங்களில் நடித்து வருவதால், அவற்றின் வியாபாரத்தை பெருக்க இந்நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிகிறது.