'ஓ மை டாக்' படத்தில் பத்து வயதுச் சிறுவனுக்கு தாயாக நடித்துள்ளார் மகிமா நம்பியார்.
இதையடுத்து, ஏன் இப்படி நடித்தீர்கள் என நெருக்கமான தோழிகள் முதல் திரையுலகப் பிரமுகர்கள் வரை பலரும் விசாரிக்கிறார்களாம்.
"இதில் என்ன தவறு இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. கதைப்படி நான் ஏற்றது மிக முக்கியமான கதாபாத்திரம். எனக்கு மகனாக அருண் விஜய்யின் மகன் அர்னவ் நடித்திருக்கிறான்.
"நான் இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று அருண் விஜய்தான் தயாரிப்புத் தரப்பிடம் கூறியுள்ளார். அதன் பிறகு என்னைச் சந்தித்த இயக்குநர் சரோவ் கதையை விவரித்தபோது, இப்படியொரு கதையா என்று என்னை வெகுவாக ஆச்சரியப்பட வைத்தார்.
"அவர் சொன்ன கதையையொட்டி நிறைய ஆங்கில, பிற மொழிப் படங்கள் பார்த்துள்ளேன். ஆனால் இது முற்றிலும் வித்தியாசமானது. எனது சினிமா வாழ்க்கையில் இப்படியொரு படத்தில் நடித்ததற்காக எனது குடும்பம் என்றென்றைக்கும் பெருமைப்படும்," என்கிறார் மகிமா.
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்தியாவின் சிறந்த 25 திகில் படங்களில் ஒன்றாக 'மகாமுனி' படம் பார்வையாளர்களின் மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
அதில் நாயகியாக நடித்துள்ள மகிமாவுக்கு மட்ரிட் அனைத்துலக திரைப்பட விழாவில் துணை நடிகைக்கான விருதையும் டொரோண்டோ பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுத் தந்துள்ளது.
தமது அண்மைய பேட்டிகளில் எதுகுறித்து கேள்வி கேட்டாலும், மனதில்பட்டதை துணிச்சலுடன் தெரிவிக்கிறார் மகிமா. இதனால் சிக்கல் வராதா என்று கேட்டால், இன்று திரைஉலகத்தினர் அளிக்கும் பேட்டிகளும் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகள்போல் மாறிவிட்டது என்கிறார்.
"முன்பெல்லாம் நடிகைகளிடம் கேள்வி கேட்கப்படும். அவர்கள் பதில் சொல்வார்கள். ஆனால் இப்போது பேட்டிகளின்போது நடிகைகளை போட்டியாளர்களைப் போல் சித்திரித்துவிடுகிறார்கள். நானும் என்னை அப்படித்தான் நினைத்துக்கொள்கிறேன்.
"எதிரே இருப்பவர்கள் நமக்குப் போட்டியாளர்கள் என்று ஆகிவிட்ட பிறகு, பதில்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என யோசித்துப் பாருங்கள். எனினும் இப்படி பேட்டி தருவது எனக்கு நல்ல பொழுதுபோக்கு எனில் பார்வையாளர்களுக்கும் அப்படித்தான். இங்கு, இப்போது, எல்லாமே போட்டி என்றாகிவிட்டது. போட்டியின் தன்மையை, போட்டியாளர்களுக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ள வேண்டும்," என்கிறார் மகிமா.
இவரால் தமிழில் சரளமாகப் பேச முடிகிறது. தாம் நடித்த படங்களின் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், உடன் நடிக்கும் நடிகர்களிடம் இருந்துதான் தமிழில் பேசக் கற்றுக்கொண்டாராம். எனினும் பேச்சுத்தமிழ் நன்றாக வந்தாலும், முறைப்படி தமிழில் எழுதப்படிக்க கற்றுக்கொள்ள விரும்புகிறார்.
"அதற்கான நேரம்தான் இன்னும் அமையவில்லை. மிக விரைவில் அதைச் சாதிப்பேன்," என்று சொல்லும் மகிமாவுக்கு தமிழில் நாயகர்களில் மிகவும் பிடித்தமானவர் அஜித்.
"அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என விரும்புகிறேன். சூர்யாவுடன் ஒரே ஒரு காதல் கதையிலாவது நடிக்க வேண்டும். பிறகு, விஜய்யுடன் அடிதடி படம், தனுஷுடன் நடனமாட வேண்டும் என்று என் பட்டியல் ரொம்ப நீளமானது," என்கிறார் மகிமா.

