வலுவான உடல், வலுவான மனம் என்பதுதான் அடுத்த ஓராண்டுக்கான தமது இலக்கு என்கிறார் சமந்தா. சமூக ஊடகங்கள் மூலம் தமது தீவிர ரசிகர்களிடம் அவ்வப்போது உரையாடும் அவர், தற்போது தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். "இது எனக்கு சவாலான தருணம். அடுத்த ஓராண்டு காலம் நான் உடல் அளவில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்," என்று தமது அண்மைய பதிவில் குறிப்பிட்டுள்ள சமந்தா, அதனுடன் தாம் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
சிவகார்த்தியேனின் தந்தை திருச்சியில் காவல்துறை அதிகாரியாக நீண்டகாலம் பணியாற்றியவர். அங்குள்ள திருவீழிமிழலைதான் சிவாவின் பூர்வீகம். இந்நிலையில், தன் தாயின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், சொந்த ஊரில் புது வீடு கட்டியுள்ளார் சிவா. சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று அந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நடந்துள்ளது. அதில் குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்ந்தார் சிவா.
'நாகா' என்ற தலைப்பில் உருவாகும் புதிய படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாகவும் பிந்துமாதவி, ரைசா வில்சன் ஆகிய இருவரும் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். ஆண்டனி சார்லஸ் இயக்குகிறார். "முன்னொரு காலத்தில் நாக நாடு என்ற பகுதி இருந்தது. அது பாம்புகளுக்கான தனி உலகம்.
அங்குள்ள ஒரு கிராமத்தில் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன் வசித்த பெண்ணாக பிந்துமாதவி நடிக்கிறார். அவருக்கு திடீரென ஒரு பிரச்சினை ஏற்பட, அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை. "இதில் அகழ்வாராய்ச்சி யாளராக ஸ்ரீகாந்த் நடிக்க, ரைசா வில்சனின் கதாபாத்திரம் குறித்து இப்போது ஏதும் சொல்ல முடியாது. நாக நாட்டில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு, நிகழ்கால பிரச்சினை களுக்கு ஸ்ரீகாந்த் எப்படித் தீர்வு காண்கிறார் என்பதை விறுவிறுப்பாகச் சொல்லப்போகிறோம்," என்கிறார் ஆண்டனி சார்லஸ்.
காவல்துறையினரின் பணி மிக மேன்மையானது என்கிறார் நடிகர் சூரி. அண்மையில் வெளியான 'டாணாக்காரன்' படம் மிக அருமையான படைப்பு என்று அவர் சமூக ஊடகப் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.
"பெற்றவர்களுக்குக்கூட பிள்ளைகளை அடிக்க உரிமையில்லை. ஆனால் காவல்துறையின் கைகளில் ஜனநாயகமே பிரம்புகளை தந்துள்ளது. பெற்றவர்களின் பொறுப்பு, ஆசிரியரின் கண்டிப்பு, நண்பனின் கனிவு ஆகியவற்றை ஒருசேர கடைப்பிடிக்கும் காவல்துறையினருக்கு எனது சல்யூட். இந்தப் படம் ஆகச்சிறந்த படைப்பு," என்று பாராட்டி உள்ளார் சூரி.
'பீஸ்ட்' படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருமா என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள இயக்குநர் நெல்சன் திலீப்குமார், அதற்கு வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். "கதையை உருவாக்கும்போதே அந்தக் கோணத்தில்தான் காட்சிகளை அமைத்தோம். எனினும் இரண்டாம் பாகம் உருவாகுமா என்பது விஜய் சார் கையில்தான் உள்ளது," என்கிறார் நெல்சன். இதை வைத்து இணையவாசிகள் அவரைக் கிண்டல் செய்துள்ளனர். "இரண்டாம் பாகம் உருவாகும் என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அவ்வாறு தயாரானால் அதில் விஜய் நடிப்பாரா?" என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

