படிப்பில் நாட்டமில்லாத தனது மகன் சூர்யா, இப்போது திரைப்பட நடிகராகப் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருவதாக பழம்பெரும் நடிகர் சிவகுமார் கூறியுள்ளார்.
சூர்யாவின் நிறுவனம் தயாரித்துள்ள 'ஓ மை டாக்' படத்தின் அறிமுக விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், தன் மகனின் வாழ்வில் நடந்தவற்றை நினைக்கும்போது எல்லாம் கனவுபோல் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
"எங்கள் மகன் (சூர்யா) எதிர்காலத்தில் என்னவாகப் போகிறார் என்று நானும் என் மனைவியும் பயந்த, வருத்தப்பட்ட காலமும் இருந்தது. நாள் முழுவதும் வீட்டில் இருந்தாலும் சூர்யா, நான்கு வார்த்தை பேசினால் அதுவே அதிசயம்தான்.
"பள்ளியில் எல்லாமே ஆங்கிலம்தான். ஆனால் சூர்யாவுக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை. வகுப்பறையில் முன்வரிசையில் இருக்கும்போது ஆசிரியர் கேள்வி கேட்டால், பின்வரிசைக்கு ஓடிவிடுவார்.
"வாழ்நாள் முழுவதும் கேள்விகளில் இருந்து எப்படித் தப்பிப்பது என்பதை மட்டுமே யோசித்த பையன்.
"கல்லூரியில் படித்தபோது பருவத்தேர்வில் பலமுறை தேர்ச்சி பெறாததால், கோபம் அடைந்தேன். படிப்பை முடிக்காவிட்டால் அவ்வளவுதான் என்று கண்டித்தேன். அதன் பிறகு படாதபாடுபட்டு பட்டப்படிப்பை நிறைவு செய்தார். அதன் பிறகு மேற்படிப்பே வேண்டாம் என்று கூறிவிட்டார்.
"தனியார் நிறுவனத்தில் குறைந்த சம்பளத்துக்கு வேலை பார்த்த போதுதான் இயக்குநர் வசந்த் திரையுலகில் சூர்யாவை அறிமுகம் செய்தார். அதன் பிறகு சில தோல்விப் படங்களே அமைந்தன.
"திரையுலகம் குறித்து ஒன்றுமே தெரியாத சூர்யாவை அவரது எட்டாவது படத்தில் பாலா என்ற படைப்பாளி வந்து அழகாகச் செதுக்கினார்.
"அந்தப் பையன்தான் இன்று 'ஜெய் பீம்' என்றொரு படத்தைத் தயாரித்து, நடித்து உலகையே வெற்றி கொண்டுள்ளார். இதை என்னால்கூட கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. எல்லாமே ஒரு கனவுபோல் இருக்கிறது.
"மேலே உள்ள ஒருவன் நம்மை பார்க்கிறான். அனைத்தையும் அவன்தான் தீர்மானிக்கிறான். எந்த வெற்றிக்கும் மனித முயற்சி மட்டும் காரணம் அல்ல.
"அனைத்தையும் கடந்து இறைவனின் ஆசி என்று ஒன்று இருப்பதாக நம்புகிறேன்," என்றார் சிவகுமார்.

