சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்படத்துக்கு இளையராஜாவும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர்.
எதிர்வரும் மே மாதம் 10ஆம் தேதி 'மாமனிதன்' படம் வெளியீடு காண உள்ள நிலையில், இளையராஜாவின் கால்களில் விழுந்து ஆசி பெற்றுள்ளார் சேதுபதி. இதுகுறித்து சீனு ராமசாமி சமூக ஊடகங்களில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
"இளையராஜாவை சந்தித்து அன்பும் வாழ்த்தும் ஆசியும் பெற்று 'மாமனிதன்' பட இசை வெளியீட்டு நிகழ்வுக்குச் சென்றோம். இது முக்கியமான சந்திப்பு," என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார் சீனு ராமசாமி.
இதற்கிடையே இப்படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்பும் வெளியாகி உள்ளது. 'தர்மதுரை' திரைப்படத்திற்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகள் உள்ளன.
இப்படத்தில் காயத்ரி, குரு சோமசுந்தரம், அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

