முதன் முறையாக கல்லூரி மாணவர் வேடத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் 'டான்' படத்தில்தான் அழகான கல்லூரி மாணவராக வலம் வருகிறார் சிவா.
'டான்' என்றால் ரவுடிக் கும்பலின் தலைவன், நிழல் உலக தாதா, கடத்தல் கும்பலின் தலைவன் என்று பலவிதமாக யோசிக்க வேண்டாம். இதுவரை 'டான்' கதாபாத்திரம் உலகெங்கும் இப்படித்தான் சித்திரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தமிழ் 'டான்' கொஞ்சம் வித்தியாசமானவராம்.
"கல்லூரியில் தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு திரியும் செல்லமான 'டான்'தான் நம்ம சிவா. அந்தக் கல்லூரிக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்புமே இல்லாததுபோல் அவன் நடந்துகொள்வதும் பேராசிரியர்களிடமே வம்புக்குப் போவதும் ரகளையாக இருக்கும்," என்கிறார் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி.
படத்தின் கதைக்களம் எப்படிப்பட்டதாக இருக்கும்?
"இது முழுக்க முழுக்க கல்லூரி மாணவர்கள் சம்பந்தப்பட்ட கதை என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக இருக்கும் என்பதுதான் உண்மை. கல்லூரி என்பது இப் படத்தின் ஒரு பகுதி மட்டும்தான்.
"அவற்றை எல்லாம் கடந்து, ஒரு எதார்த்தமான பையனின் சுற்றம், அவனது குடும்பம் எப்படி இருக்கும் என்பதையும் அவனது உணர்வுகள் எப்படி வெளிப்படும் என்பதையும் காட்சிப்படுத்தும் படம் இது. ஒரு பையன் பிறந்தது முதல் முப்பது வயது வரை என்ன செய்கிறார் என்பதுதான் இப்படத்தின் ஒருவரிக் கதை," என்கிறார் சிபி.
கடந்த 2018ஆம் ஆண்டிலேயே இந்தக் கதையை சிவாவிடம் விவரித்தாராம். ஆனால் அந்தச் சமயத்தில் அவருக்கு அந்தக் கதை பொருந்தவில்லையாம்.
ஆனாலும் சிபி சும்மா இருக்கவில்லை. தனது கதையில் பலவிதமான மாற்றங்களைச் செய்து, சரியாக ஓராண்டுக்குப் பிறகு சிவாவை மீண்டும் சந்தித்து கதை சொல்ல, அந்தச் சமயத்தில் கல்லூரி நாயகனாக நடிக்க வேண்டும் என்ற விருப்பம் சிவாவுக்கும் இருக்க, 'டான்' வேலைகள் தொடங்கின.
படப்பிடிப்புக்குச் செல்லும் வரை கதையில் பல மாற்றங்களைச் செய்து கொண்டே இருந்தாராம்.
"பெரும் பொருள்செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாவேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஆனால் சிவா சார் ஆதரவால் இது சாத்தியமாகி உள்ளது," என்று நெகிழ்கிறார் சிபி.
'டான்' படத்தில் ஆறு இயக்குநர்கள் நடித்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சிங்கம்புலி, மனோபாலா, கவிதா பாரதி ஆகியோரைத் தவிர கௌதம் மேனன் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார்.
"ஒரு இயக்குநரை வைத்துப் படம் இயக்குவதே பெரிய சவால். நான் ஆறு இயக்குநர்களைச் சமாளித்திருக்கிறேன். எனினும் அனைவரும் தங்கள் அனுபவத்தை பொருட்படுத்தாமல் எனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடித்துக் கொடுத்தனர்.
"'டான்' கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே பல படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் இருந்து இந்த தமிழ் 'டான்' வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் மொத்தக் குழுவும் தெளிவாக உள்ளது.
"இந்தப் படம் ஒரு வாழ்க்கைப் பயணமாக இருக்கும். கல்லூரி பகுதியைக் கடந்தவுடன் சுவாரசியமான தந்தை, மகன், ஆசிரியர்கள்-மாணவர்கள், காதல் - நண்பர்கள் என்று எல்லாமே இருக்கும். ஏற்கெனவே அனிருத் இசையில் அமைந்த பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன.
அனிருத்துடன் பணியாற்றும்போது நமக்கும் ஒருவித நேர்மறை உணர்வு ஏற்படும். எந்த நேரத்திலும் உற்சாகமாக இருப்பார். படத்தைப் பார்த்துவிட்டு சிறப்பாக வந்திருப்பதாகப் பாராட்டினார்.
"இந்தக் கதையை எழுதும்போதே தமிழ் தெரிந்த நாயகியைத்தான் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதற்கேற்ப பிரியங்கா மோகனின் கால்ஷீட் கிடைத்தது.
"மிகுந்த அர்ப்பணிப்புடன் கூடிய நடிகை. மொழி தெரிவதால் வசனங்களை நன்கு உள்வாங்கிக்கொண்டு உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.
"இந்தப் படத்திலும் சூரியும் சிவாவும் நகைச்சுவைக் கூட்டணி அமைத்துள்ளனர். தவிர, காளி வெங்கட், மிர்ச்சி விஜய், பாலசரவணன், முனீஸ்காந்த், ராதாரவி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
"மொத்தத்தில் இந்த 'டான்' உங்களை அனைத்து வகையிலும் மகிழ்விப்பான்," என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் சிபி சக்கரவர்த்தி.

