இப்போதெல்லாம் நாயகிகளை மையப்படுத்தி உருவாகும் படங்களும் அடிதடியும் அதிரடியும் நிறைந்த படைப்புகளாக உருவாகின்றன.
அந்த வகையில் ஆண்ட்ரியா நாயகியாக நடித்துள்ள 'நோ என்ட்ரி' படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி உள்ளது.
இந்தப் படத்துக்காக ஆண்ட்ரியா மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்திருப்பதாகச் சொல்கிறார் அறிமுக இயக்குநர் அழகு கார்த்திக்.
"இந்தக் கதைக்கு எனது முதலும் கடைசியுமான தேர்வு ஆண்ட்ரியாதான். கதையை சொல்லத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தனக்குப் பிடித்திருப்பதாகவும் தாம் எதிர்பார்த்த மாதிரியே இருப்பதாகவும் சொல்லிவிட்டார். ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்காக கடுமையாக உழைக்கக்கூடிய ஒருசில நடிகைகளில் இவரும் ஒருவர்.
"எல்லோருக்கும் முன்பாகவே படப்பிடிப்புக்கு வந்துவிடுவார். தினமும் அவர் வந்த பிறகே நானும் மற்றவர்களும் வந்து சேர்வோம். முன்னணி நடிகை என்றாலும் அவரிடம் எந்தவித பந்தாவும் இருந்ததில்லை," என்று பாராட்டுகிறார் அழகு கார்த்தி.
மனித நடமாட்டம் இல்லாத மலைப் பகுதி. அங்கு ஒரு மரவீடு. அதன் உரிமையாளர் வாழ்ந்து வருகிறார். அந்த இடத்துக்கு சில தம்பதியர் வருகிறார்கள். அதே இடத்துக்கு நாயகியும் சில காரணங்களுக்காக வருகிறார். அங்கு நடக்கும் சம்பவங்கள்தான் கதை.
"அந்த மலைப்பகுதியில் விஞ்ஞானி ஒருவர் இந்திய எல்லைப் பாதுகாப்புக்காக சில உயிரியல் மாற்றங்களோடு நாய்களை பயன்படுத்துவது தொடர்பில் ஓர் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். அந்த நாய்கள் மிகவும் ஆக்ரோஷமானவை. நான்கு நாய்கள் ஒன்று சேர்ந்தால் ஒரு யானையை காலி பண்ணிடும்.
"அப்படிப்பட்ட நாய்கள் இருக்கும் இடத்துக்குத்தான் காதல் ஜோடிகளும் தம்பதியரும் நாயகியும் வந்து சேர்கிறார்கள். இதையடுத்து ஆபத்தில் சிக்கும் அவர்கள் அதிலிருந்து எப்படி தப்புகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி உள்ளோம்.
"நாங்கள் படப்பிடிப்பு நடத்திய இடம் மிகவும் வித்தியாசமான பகுதி. அங்குள்ள பாலத்தில் முக்கிய காட்சிகளைப் படமாக்கினோம். நான்காயிரம் படிகள் ஏறி, அதன் பிறகு மேடு பள்ளம் என்று கீழ்நோக்கி இறங்கினால்தான் படப்பிடிப்பு நடந்த இடத்தைச் சென்றடையும் முடியும். இதற்கு சில மணிநேரம் ஆகும்.
"ஆண்ட்ரியா கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல், தினமும் எங்களுடன் நடந்து வருவார். அது மட்டுமல்ல, தன்னால் இயன்ற படப்பிடிப்புக் கருவிகளையும் சுமந்தார். அவர் எப்போதுமே சுறுசுறுப்பாகச் செயல்படக்கூடியவர். நடக்கும் போதும்கூட அவர்தான் முன்னே செல்வார். கரடுமுரடான பாதையில் ஓடுவது, எதிரிகளுடன் சண்டை போடுவது என அடிதடிக் காட்சிகளில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்," என்கிறார் அழகு கார்த்திக்.
எவ்வளவு பெரிய வசனமாக இருந்தாலும், ஒரே 'டேக்'கில் பேசி முடித்துவிடுவாராம் ஆண்ட்ரியா. உலகிலேயே அதிக மழை பெய்யக்கூடிய பகுதியான சிரபுஞ்சியில்தான் மொத்த படப்பிடிப்பும் நடந்துள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த இடம் புதிதாக இருக்கும். இதுவரை எந்த தமிழ்ப்படமும் அங்கு எடுக்கப்பட்டதில்லையாம்.
"எனக்குத் தெரிந்தவரை அங்கு எந்த படப்பிடிப்பு நடந்ததில்லை. அங்குள்ள குறிப்பிட்ட பகுதியில் நினைத்தவுடன் படப்பிடிப்பை நடத்திவிட முடியாது. மேலும், எல்லா பொருள்களுமே ஒன்றுக்கு மூன்று மடங்கு விலை அதிகமானது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்து செல்கிறார்கள். எங்கள் படக்குழுவில் 112 பேர் இருந்தோம். அதனால் 13 டன் மளிகைப்பொருள்களைக் கொண்டு சென்றோம். இந்தப் படம் ஆண்ட்ரியாவின் திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமையும்," என்கிறார் அழகு கார்த்திக்.

