இப்போதெல்லாம் திரையுலகத்தினர் விடுமுறை என்றாலே மாலத்தீவு பக்கம் ஒதுங்கிவிடுகிறார்கள். அதிலும் முன்னணி நடிகைகள் பலர் அண்மையில் அங்கு சென்று திரும்பி உள்ளனர். அந்தப் பட்டியலில் இப்போது நடிகை ராய் லட்சுமியும் இடம்பெற்றுள்ளார்.
அண்மையில் மாலத்தீவு சென்ற அவர் அங்கு நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட கவர்ச்சிப் படங்களை வெளி யிட்டுள்ளார்.
மேலும் கடலுக்கு அடியில் செல்லும் 'ஸ்கூபா டைவிங்' பயிற்சியின்போது எடுக்கப்பட்ட காணொளியும் அவரது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அந்தப் பதிவில், "வேறொரு புதிய உலகத்திற்குள் உள்ளேன். இங்கு வாழ்க்கை சுதந்திரமானதாக உள்ளது," எனப் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ராய் லட்சுமி.
ரஜினியின் 169ஆவது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவது உறுதியாகி உள்ளது.
முன்னதாக 'பீஸ்ட்' படத்துக்கு கிடைத்த கலவையான விமர் சனங்களை அடுத்து, ரஜினி படத்தின் இயக்குநர் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், ஜூலை மாதம் ரஜினி படப்பிடிப்பில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இதை உறுதி செய்யும் வகையில் இயக்குநர் நெல்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் உள்ள சுய விவரப் பகுதியில் 'தலைவர் 169' படத்தை மீண்டும் இணைத்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இசையமைக்கிறார். படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகக்கூடும்.
நடிகை காஜல் அகர்வால் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இதுகுறித்து காஜலோ அவரது கணவரோ அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
எனினும் காஜலின் தங்கை நிஷா அகர்வால், "இன்று வாழ்க்கையின் அற்புதமான நாள்," என்று இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, காஜலின் திரையுலக நண்பர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக ஊடகங்கள் வழி ரசிகர்களின் வாழ்த்துகளும் குவிகின்றன.
'யாரடி நீ மோகினி' படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க தனுஷ் தயங்கிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அப்படத் தின் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இத்தகவலை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
"இந்தப் படத்துக்காக நானும் தயாரிப்பாளரும் சேர்ந்துதான் நயன்தாராவை தேர்ந்தெடுத்தோம். நாயகி கதாபாத்திரத்துக்கு அவர்தான் பொருத்தமாக இருப்பார் என நான் நினைத்தேன். ஆனால் தனுஷிடம் இந்த விஷயத்தைச் சொன்னபோது அவர் தயங்கினார்.
"நயன்தாராவுடன் நடிக்க அவர் தயங்கியது தெரிந்தது. எனினும், எனது தேர்வை ஏற்றுக்கொண்டு படத்தில் நடித்து முடித்தார். பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான படம் குறித்து ரசிகர்கள் இப்போதும் பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது.
"எனது முதல் படத்திலேயே பெரிய, அனுபவ நட்சத்திரங்களை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது தனுஷை வைத்து 'திருச்சிற்றம்பலம்' படத்தை இயக்கியுள்ளேன்," என்று மித்ரன் ஜவஹர் கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள 'விக்ரம்' படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டை மே மாதம் துபாயில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனராம்.

