கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்துள்ள 'சாணி காயிதம்' படத்தில் தனது நடிப்பு எப்படி உள்ளது என்பதைக் காண தாமே ஆவலாக உள்ளதாகக் கூறுகிறார் இயக்குநர் செல்வராகவன்.
'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ள அவர், படம் இயக்குவதைவிட நடிப்பதுதான் சிரமமான விஷயம் என்கிறார். விஜய்யை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு தமக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அமைந்ததாகவும் சில காரணங்களால் அது கைகூடவில்லை என்றும் அண்மைய பேட்டியில் மனம் திறந்துள்ளார் செல்வ ராகவன்.
"விஜய்யும் நானும் முன்பே இணைந்திருக்க வேண்டும். அதற்கான பேச்சுவார்த்தைகள் பலமுறை நடந்தன. ஆனால் ஒரு சில காரணங்களால் அது தள்ளிப்போனது.
"எல்லாம் சரியாக அமைந்தால் எதிர்காலத்தில் அவரை வைத்து நான் படம் இயக்க வாய்ப்புண்டு. இதுகுறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும்.
"விஜய் மிக அற்புதமான மனிதர், நடிகர். மக்கள் மத்தியில் அவருக்கு இந்த அளவுக்கு வரவேற்பு உள்ளது என்றால், அதற்கு அவரது அர்ப்பணிப்பும் உழைப்பும்தான் காரணம்.
"படப்பிடிப்பின்போது அவரைப் போல் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நடிகரை இதுவரை நான் பார்த்ததில்லை. அவருடன் பேசியதைவிட, பார்த்து ரசித்ததுதான் அதிகம்," என்கிறார் செல்வராகவன்.
'சாணிக் காயிதம்' படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டியே ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது. இதில் செல்வா என்ன கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் என்பது குறித்து அதிக தகவல்கள் இல்லை.
"இந்தப் படத்தில் எனது நடிப்பு எப்படி இருக்கும் என்று என்னிடமே கேட்கிறார்கள். அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரிய வில்லை. நான் எப்படி நடித்திருக்கிறேன் என்று பார்க்க எனக்கே ஆவலாய் உள்ளது. 'சாணி காயிதம்' இயக்குநர் அருணும் நானும் சேர்ந்து தற்போது 'நானே வருவேன்' திரைப்படத்திலும் இணைந்து வேலை செய்து கொண்டிருக்கிறோம். எனது நடிப்பு நன்றாக இருந்ததாக அருண் கூறினார். எனினும் படம் வெளிவந்த பிறகே எல்லாம் தெரியவரும்," என்று சொல்லும் செல்வராகவன், 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய இரு படங்களின் இரண்டாம் பாகங்களை படமாக்க தாம் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்.
"இரு படங்களுமே வெவ்வேறு கதைக்களங்களைக் கொண்டவை. தனுஷ் முன்பே சொன்னதுபோல், ஏற்கெனவே செய்ததைவிட சிறந்த படைப்பைத் தரவேண்டும். இல்லை யென்றால் பேசாமல் இருக்க வேண்டும். தனுஷ், கார்த்தி இருவரும் முன்வந்தால்தான் இரண்டாம் பாகங்கள் குறித்து யோசிக்க முடியும். காலம் கனியும் போது எல்லாம் நல்லவிதமாக நடக்கும்," என்கிறார் செல்வராகவன்.

