'பீஸ்ட்' படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு என்கிறார் இளம் நடிகை அபர்ணா தாஸ்.
இன்ஸ்டகிராமில் தாம் பதிவிட்ட புகைப்படத்தைப் பார்த்துத்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது என்றும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"நான் திரையுலகுக்குப் புதியவள். இரண்டு படங்களில் மட்டுமே நடித்து முடித்துள்ளேன். இந்நிலையில், 'பீஸ்ட்' படக்குழுவிடம் இருந்து திடீரென ஒருநாள் தொலைபேசி அழைப்பு வந்தது. நம்மை எல்லாம் அவ்வளவு பெரிய படத்தில் நடிக்க கூப்பிடுவார்களா? என்று எனக்குச் சந்தேகம்.
"இன்ஸ்டகிராமில் நான் பதிவிட்ட படத்தைப் பார்த்துத்தான் என்னைத் தொடர்புகொண்டதாக தெரிவித்து, 'பீஸ்ட்' படத்தில் நடிக்க விருப்பம் இருந்தால் மேலும் சில புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர்.
"விஜய்யுடன் நடிக்க யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. உடனே புகைப்படங்களை அனுப்பி வைத்தேன்," என்கிறார் அபர்ணா.
மஸ்கட்டைச் சேர்ந்த இவர் எம்பிஏ பட்டதாரி. பொழுதுபோக்காக 'டிக்டோக்' செயலி மூலம் சில காணொளிகளைத் தயார் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு வந்துள்ளார். அதைப் பார்த்த மலையாளப் பட வாய்ப்பு தேடி வந்துள்ளது. முதல் படத்திலேயே வில்லியாக நடித்திருக்கிறார். பிறகு 'மனோஹரம்' என்ற மலையாளப் படத்தில் நாயகியாக நடித்து முடித்துள்ளார்.
"ஒருவகையில் இன்ஸ்டகிரா முக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அதன் மூலம்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளேன். கதாநாயகி வேடங்கள் தேடிவரும் நிலையில், துணைக் கதாபாத்திரமாக நடிக்க எப்படிச் சம்மதித்தேன் என்று சிலர் கேட்கிறார்கள்.
"எனக்கும் தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கவேண்டும் என்ற விருப்பம் உள்ளது. அதேசமயம் 'பீஸ்ட்' போன்ற படத்தில் நடிக்கும்போது நாம் கடைக்கோடி ரசிகனையும் சென்றடைய முடியும் என்று நினைத்தேன். எனது எதிர்பார்ப்பு வீண் போகவில்லை," என்கிறார் அபர்ணா.
தற்போது இவர் நடித்து முடித்துள்ள 'பிரியன் ஓட்டத்திலானு' என்ற மலையாளப் படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து கேட்டால், இடைவிடாமல் அரைமணி நேரத்துக்கு விஜய் புராணம் பாடுகிறார்.
"விஜய் மிக நட்பாகப் பேசக்கூடியவர். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கார்களில்தான் படப்பிடிப்புக்கு வருவார். 'பீஸ்ட்' படப்பிடிப்பின்போது எனது பிறந்த நாள் வந்தது. இதை தெரிந்துகொண்ட படக்குழுவினர் பெரிய கேக் ஒன்றை வாங்கி வந்து வெட்டச் செய்து, வாழ்த்து தெரிவித்தனர்.
"அன்று பார்த்து விஜய் சார் தமது ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்திருந்தார். பிறந்தநாள் குறித்து அறிந்துகொண்ட அவர், பூஜா ஹெக்டே, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோரை அந்தக் காரில் ஏற்றிக்கொண்டு வலம் வந்தார். இந்தப் பிறந்தநாளை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது," என்கிறார் அபர்ணா.
நல்ல கதையம்சமுள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்பவர், புதுமுகங்களுக்கு உடனடியாக அத்தகைய வாய்ப்புகள் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்கிறார்.
"அதனால்தான் விஜய் போன்ற பெரிய நடிகர்களுடன் நடிப்பது அவசியமாகிறது. மேலும், திறமை வாய்ந்த கலைஞர்களை உள்ளடக்கிய படக்குழுவும் மிக முக்கியம்.
"எனக்கு 27 வயதாகிறது. மூன்று படங்களில் மட்டுமே நடித்து முடித்துள்ளேன். விஜய்யுடன் நடிப்பேன் என்று கனவில்கூட நினைத்ததில்லை.
"இந்த வாய்ப்பு என்னைத் தேடிவந்ததில் குடும்பத்தார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனது நெருக்கமான தோழிகள்கூட இதுகுறித்துப் பொறாமைப்படுகிறார்கள். அதைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக உள்ளது," என்று சொல்லும் அபர்ணா, இதுவரை அதிர்ஷ்டம்தான் தமக்கு அனைத்தையும் பெற்றுத் தந்துள்ளது என்கிறார்.
இனி, தனது திறமையை நன்கு வெளிப்படுத்தி நல்ல நடிகை எனப் பெயர் வாங்குவதே தமது இலக்கு என்றும் சொல்கிறார்.
"திரையுலகப் பயணத்தைப் பொறுத்தவரை நான் சரியான திசையில் செல்வதாகவே உணர்கிறேன். 'பீஸ்ட்' படம் மூலம் அனைவரும் அறிந்த நடிகையாக உயர்ந்துள்ளேன். இனி தரமான படங்களில் என்னைப் பார்க்க முடியும்," என்கிறார் அபர்ணா தாஸ்.

