விஜய் சேதுபதி நடித்துள்ள படங்களுக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் முளைப்பது வாடிக்கையாகிவிட்டது.
அவர் நடித்துள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படம் வெளியீடு காண தயாராகி நீண்ட நாள்கள் ஆகிவிட்டன.
இருப்பினும் வெளியீட்டு உரிமையை வாங்க இதுவரை யாரும் முன்வரவில்லையாம். குறைந்தபட்சம் செயற்கைக்கோள், தொலைக்காட்சி உரிமம்கூட விலை போகவில்லை.
வழக்கம்போல் விஜய் சேதுபதி தான் முயற்சி மேற்கொண்டு இப்படம் வெளியீடு காண உதவ வேண்டியிருக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
இதற்கிடையே, சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி இருக்கும் 'மாமனிதன்' படத்தின் வெளியீடு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், 'தர்மதுரை' படத்தை தயாரித்த ஆர்.கே.சுரேஷ், 'மாமனிதன்' படத்தின் விநியோக உரிமையை வாங்கி உள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது.
அதையடுத்து, மே மாதம் 20ஆம் தேதி படம் திரைகாணும் என்று கூறப்பட்ட நிலையில், அதை மாற்றி ஜூன் 24ஆம் தேதி வெளியாகும் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

