திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
723bb95f-2fa3-48c6-b987-43c58d78a6b2
-
multi-img1 of 2

 நடிகர் அருண் விஜய்யும் அவரது மகனும் இணைந்து நடித்துள்ள படம் 'ஓ மை டாக்'. ஷரோவ் சண்முகம் இயக்கி உள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. ஒரு சிறுவனுக்கும் அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையே உள்ள பாசப் பிணைப்பை விவரிக்கிறது இந்தப் படம். இந்நிலையில், 'ஓ மை டாக்' படம் குறித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். செல்லப்பிராணி விரும்பியாக தாம் இந்தப் படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பின்னூட்டமிட்டுள்ள சூர்யா, ஜான்டி ரோட்சுக்கு நன்றி தெரிவித்திருப்பதுடன், தாம் அவரது தீவிர ரசிகர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், "இந்தப் படம் உங்கள் மகளுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்," என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

 சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் நஸ்ரியா. அவரும் நானியும் இணைந்து நடித்துள்ள புதுப் படத்துக்கு 'அடடே சுந்தரா' என தலைப்பு வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் இப்படம் வெளியீடு காண்கிறது. இருவேறு மதங்களைச் சேர்ந்த நானியும் நஸ்ரியாவும் காதலிப்பது போன்று படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கி உள்ளார்.

 அடுத்து தெலுங்கு நாயகன் விஜய் தேவர கொண்டாவுடன் இணைந்து நடிக்க உள்ளார் சமந்தா. இது காஷ்மீரைக் கதைக் களமாகக் கொண்டு உருவாகும் படம். பெரும்பாலான காட்சிகளை காஷ்மீர் எல்லைப் பகுதியில் படமாக்க உள்ளனர். இதில் காஷ்மீர் பெண்ணாக நடிக்கும் சமந்தா, மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என ரசிகர்களுடனான கலந்துரையாடலின் போது குறிப்பிட்டுள்ளார். "மகிழ்ச்சியாக இருப்பதற்காக நாம் எதையும் செய்யத் தேவையில்லை. தினமும் காலையில் கண்விழித்ததும், இன்று நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மனதில் உறுதிமொழி எடுத்துக்கொண்டால் போதும். அந்த நாள் இனிய அனுபவமாக மாறும்," என்கிறார் சமந்தா.

 தனுஷ் நடிக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகள், இணையத்தில் வெளியானதால் அப்படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மித்ரன் ஜவஹர் இயக்கும் இந்தப் படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தொழில்நுட்பப் பணிகளைக் கவனித்து வருகிறார் இயக்குநர். இந்நிலையில், தனுஷும் நித்யா மேனனும் நடனமாடும் காட்சியை யாரோ கைபேசியில் படம்பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். தனுஷ் தற்போது 'நானே வருவேன்', 'வாத்தி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.