பள்ளி மாணவனாக இருந்தபோதே பெரிய நடிகராக உருவாக வேண்டும் என்று தாம் கனவு கண்டதாகச் சொல்கிறார் 'கேஜிஎஃப்' படத்தின் நாயகன் யாஷ்.
இன்று இந்திய சினிமாவின் ஆகப்பெரிய வசூல் நாயகன் என்று இவரைத்தான் குறிப்பிடுகிறார்கள். யாஷ் அடுத்து நடிக்கப் போகும் படம் என்ன, அதை இயக்கப் போவது யார், அவருக்கு என்ன சம்பளம் கிடைக்கும் என்ற கேள்விகளுக்கு விடைகளைத் தெரிந்துகொள்ள இந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கிடக்கிறார்கள்.
'கேஜிஎஃப்' படம் இதுவரை 700 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் கண்டுள்ளது. இந்திய சினிமா உலகின் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது.
இந்நிலையில், அண்மைய பேட்டியில் தமது சிறு வயதுக் கனவு நனவாக எத்தகைய சிரமங்களைக் கடக்க வேண்டி இருந்தது என விவரித்துள்ளார் யாஷ்.
"பள்ளியில் படிக்கும்போது, 'நீ வளர்ந்து பெரியவனாக ஆனபிறகு யாரைப்போல் உருவாக வேண்டும் என விரும்புகிறாய்?' என்று வகுப்பாசிரியர் கேட்கும் போதெல்லாம், சினிமாவில் நடித்து சூப்பர் ஸ்டார் ஆக மாறுவேன் என்பேன். அதைக் கேட்டு எல்லோரும் சிரிப்பார்கள்.
"என் கனவு எட்ட முடியாத தூரத்தில் இருப்பதாக என் பெற்றோரும் குடும்பத்தாரும் கருதினர். நான் கல்லூரிப் படிப்பை முடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். அதனால் வீட்டை விட்டு வெளியேறினேன்," என்கிறார் யாஷ்.
அதன் பிறகு 'பெனகா' என்ற நாடகக் குழுவில் இணைந்தவர், சில நாடகங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ, உரிய நேரத்துக்கு வராவிட்டாலோ, அவர்களுக்குப் பதிலாக யாஷ் நடிப்பாராம். அதன் பிறகு இவருக்கும் நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கத் தொடங்கின.
முந்நூறு ரூபாயுடன் வீட்டை விட்டு வெளியேறியவரின் திரைப்படங்கள் இப்போது சர்வ சாதாரணமாக 300 கோடி ரூபாய் வசூல் காண்கின்றன.
எழுபத்து ஐந்து நாடுகளில் உள்ள திரையரங்குகள் முன்பு யாஷின் பிரம்மாண்ட பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளாக மேற்கொண்ட தவத்துக்கு, கடுமையாக உழைத்ததற்குக் கிடைத்த பலன் இது என்கிறார் யாஷ்.
"கன்னட சினிமாவின் தலைநகரமாகக் கருதப்படும் காந்தி நகரில் எனது பதாகை என்றாவது ஒருநாள் வைக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் நீண்ட காலம் காத்திருந்தேன். இப்போது வெளிநாடுகளிலும் என் பதாகைகளைக் காண முடிகிறது.
"எனது விருப்பங்கள், இலக்குகள் குறித்து வெளிப்படையாகப் பேசத் தயங்கியதே இல்லை. நான் அதிகம் பேசுவதாக விமர்சித்தனர். ஆனால் நமக்கு நம்பிக்கை உள்ள விஷயங்களைச் செய்வதில் தயக்கம்கூடாது.
"அதே சமயம் இது எனக்கு மட்டுமே கிடைத்த வெற்றிஅல்ல. இயக்குநர், தயாரிப்பாளர், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று எல்லோரும் இணைந்து பெற்ற வெற்றி. பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ள இரண்டு படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு எனக்கான சுமையும் கடமையும் அதிகரித்துள்ளன. ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பது மட்டுமே எனது தற்போதைய இலக்கு," என்கிறார் யாஷ்.
கன்னடத் திரையுலகத்தின் படைப்புகள் உலக அளவில் பேசப்பட வேண்டும் என்று யாஷ் அடிக்கடி சொல்வதுண்டு. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'கேஜிஎஃப்' படம், அதை சாதித்தது என்கிறார்.
"கன்னடத் திரையுலகில் சாதித்த பிறகு பல நடிகர்கள் இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் கவனம் செலுத்துவதாகவும் தாய்மொழியை மறந்துவிடுவதாகவும் கன்னட ரசிகர்கள் மத்தியில் ஆதங்கம் உள்ளது. அவ்வாறு நினைக்கவும் கோபப்படவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு.
"அதேசமயம் ஒரு வெற்றிக்குப் பிறகு, அதைவிட பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. அதனால் ஒரு கலைஞன் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதேசமயம் நாம் சாதிப்பது, நமது வட்டாரத்தைச் சேர்ந்த இளையர்களின் கனவுகளை மேலும் கூர்படுத்த வேண்டும்.
"திரைப்பட நடிகர் என்பதுதான் எனது கனவு, எனது வாழ்க்கை எனத் தீர்மானித்துவிட்டேன். அதனால் என்னை முதலில் தூக்கி நிறுத்திய ரசிகர்களை மறக்க மாட்டேன் ," என்று சொல்லும் யாஷ், அடுத்து 'கேஜிஎஃப்' படத்தின் மூன்றாம் பாகத்துக்கு தன்னை தயார்ப்படுத்தத் தொடங்கிவிட்டார்.
எப்போதும் தாடியும் மீசையுமாகத்தான் காட்சிதர வேண்டும் என்று ரசிகர்கள் கேட்கிறார்களாம். நல்ல கதைக்களமும் கதாபாத்திரமும் அமைந்தால் அவற்றை இழக்கத் தயாராக உள்ளாராம்.
'பாகுபலி' படத்துக்கு அடுத்தபடியாக ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நோக்கி, நகர்ந்து வருகிறது 'கேஜிஎஃப் 2'.

