வெளியீடு காணும் முன்பே இருபது விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது 'வாய்தா' திரைப்படம். மகிவர்மன் சி.எஸ். இயக்கி உள்ளார்.
இயக்குநர் தாமிராவிடம் உதவி யாளராகப் பணியாற்றிய போதுதான் இந்தப் படத்தின் கதையை எழுதினாராம்.
சென்னையில் சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்துவது தொடர்பான வழக்கு ஒன்றை இவர் நண்பர் கையாண்டுள்ளார். அந்த வழக்கு முடிந்துவிட்டது. ஒருவேளை வழக்கு முடியாமல் ஓர் அப்பாவி பாதிக்கப்பட்டு இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்தாராம்.
"அந்தக் கற்பனைதான் இந்தப் படத்தை உருவாக்க காரணமாக அமைந்தது. இன்றளவும் ஒருசில வேலைகள் சாதியின் அடிப்படையில்தான் உள்ளன. அதனால் இப்படத்தில் குறிப்பிடத்தக்க சாதி அரசியலும் கனமான சம்பவங்களும் இருக்கும். அதேசமயம், எந்தவோர் இடத்திலும் குறிப்பிட்ட சம்பவத்தால் உயிரிழப்பு ஏற்படுவதாகவோ, ஒருவருடைய வாழ்க்கையே சீரழிந்து போனதாகவோ காட்சிகள் இருக்காது," என்கிறார் மகிவர்மன்.
ஒரு சாதாரண மனிதர் நீதிமன்றத்தை அணுகும்போது என்ன மாதிரியான சங்கடங்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறார் என்பதை இந்தப் படம் விளக்குகிறது. மேலும், பணம் பெற்றுக்கொண்டு ஒருவருக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகும் வழக் கறிஞர் முதல் நீதிமன்றத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் எவ்வாறு மாறுகிறார்கள் என்பதையும் 'வாய்தா' படத்தில் விரிவாகக் காட்சிப்படுத்தி உள்ளனர்.
திரை காண்பதற்கு முன்பே, பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்ற 'வாய்தா' படத்துக்கு இதுவரை இருபது விருதுகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் முதல் படத்திலேயே தமது அடை யாளத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் மகிவர்மன்.
, :

