கோடம்பாக்க நடிகைகளில் இப்போது பிரியங்கா மோகன் காட்டில்தான் வாய்ப்பு மழை இடைவிடாமல் பொழிகிறது. 'டாக்டர்' படத்தில் சிவகார்த்திகேயன், 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் சூர்யா ஆகியோருடன் இணைந்து நடித்த அவர் அடுத்து ஜெயம் ரவிக்கும் ஜோடியாகி உள்ளார். ஜெயம் ரவியின் முப்பதாவது படத்தை எம்.ராஜேஷ் இயக்குவது உறுதியாகி உள்ளது. வழக்கம்போல் நகைச்சுவை, காதல், அடிதடி நிறைந்த வணிகப் படமாக இது உருவாகிறது. இதில்தான் பிரியங்காவை ஒப்பந்தம் செய்துள்ளனர். சிவகார்த்திகேயனுடன் 'டான்' படத்தில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்து ரஜினியின் 169ஆவது படத்திலும் மகள் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
புதுப்படம் ஒன்றில் தாம் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்காக புல்லட் வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சியை மேற்கொண்டுள்ளாராம் தமன்னா. சாதாரண இருசக்கர வாகனமே ஓட்டத் தெரியாத தமக்கு, புல்லட் ஓட்டுவது பெரும் சவாலாக இருந்தது என்கிறார். "நீண்ட தூரம் புல்லட் ஓட்டிச் செல்ல வேண்டும் என்று ஆசையாக உள்ளது. எனினும் அதற்கு மேலும் பயிற்சி பெற வேண்டும். இதுபோன்ற பயிற்சிகளும்கூட ஒருவகையில் தியானம்தான். ஏதோ ஒரு வித்தியாசமான உலகில் இருப்பதுபோன்ற உணர்வு ஏற்படும். "மிக விரைவில் என்னால் புல்லட்டை சிறப்பாக ஓட்ட முடியும் என நம்புகிறேன்," என்கிறார் தமன்னா.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷன், லாஸ்லியா இணைந்து நடித்துள்ள படம் 'கூகுள் குட்டப்பா'. மலையாளத்தில் வெற்றிபெற்ற படத்தை தமிழில் மறுபதிப்பு செய்துள்ளனர். தமிழ்ப் பதிப்புக்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இதில் தர்ஷனின் தந்தையாக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் நடித்திருப்பதுடன், படத்தை யும் அவரே தயாரித்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் மே 5ஆம் தேதி இப்படம் திரைகாண்கிறது.
'அன்டே சுந்தரனிகி' என்ற தெலுங்குப் படத்தில் நடித்துள்ளார் நஸ்ரியா. இது தமிழிலும் வெளியாகிறது.
இப்படத்தின் அறிமுக விழாவில் பங்கேற்ற அவரிடம் செய்தியாளர் ஒருவர் வில்லங்கமான கேள்வியை முன்வைத்தார்.
"இஸ்லாமியப் பெண்ணாக இருந்துகொண்டு, படத்தில் கிறிஸ்துவப் பெண் கதா பாத்தி ரத்தில், இந்துக் குடும்பத்து ஆணின் மனைவியாக நடிப்பது எப்படி சாத்தியமானது?" என்பதுதான் அந்தக் கேள்வி.
ஆனால் இதுகுறித்து அலட்டிக்கொள்ளாத நஸ்ரியா, "எனக்கு கதை பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக் கொண்டேன். கதாபாத்திரத்தைப் புரிந்துகொண்டு நடித்தேன், அவ்வளவுதான்," என்று உருக்கமாகப் பதில் அளித்து அசத்தினார்.
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் கூடுதலாக இருக்குமாம். மேலும், வழக்கத்தைவிட, சண்டைக் காட்சிகளை சற்றே குறைக்கச் சொல்லிவிட்டாராம் விஜய்.

