ஒரே குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள் திருமணத்துக்குப் பிறகு அம்மாவை எப்படி பார்த்துக்கொள்கிறார்கள் என்பதும் பிள்ளைகளின் அணுகுமுறை அம்மாவுக்கு என்ன மாதிரியான சங்கடங்களையும் துன்பங்களையும் தருகின்றன என்பதையும் யதார்த்தமாகச் சொல்லி இருக்கிறாராம் சுரேஷ் மாரி.
"தமிழ் சினிமாவில் அண்மைக்காலத்தில் இதுபோன்ற கதையை யாரும் கையாளவில்லை. கே.பாலசந்தர், விசு, வீ.சேகர் போன்ற வெற்றி இயக்குநர்கள் இந்த மாதிரி கதையைச் சொல்வதில் பெரிய வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர்.
"இந்தக் காலகட்டத்தில் இந்தக் கதையைச் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதினேன். என்னைப் பாதித்த சில உண்மைச் சம்பவங்கள்தான் இந்தக் கதையை நான் தொடுவதற்குக் காரணமாக அமைந்தன.
"அந்தச் சம்பவங்களை ரசிகர்கள் முன் காட்சிப்படுத்த நினைத்தேன். அந்த வகையில் இது எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் அம்மா, பிள்ளைகளுக்கான படமாக இருக்கும்," என்கிறார் சுரேஷ் மாரி.
இந்தக் கதைக்கு தினேஷ்தான் பொருத்தமாக இருப்பார் என்று கருதியதால் அவரை ஒப்பந்தம் செய்ததாக குறிப்பிடுபவர், 'அட்டகத்தி' படத்தில் பணியாற்றியபோதே இருவரும் நல்ல நண்பர்களாகிவிட்டதாகச் சொல்கிறார்.
"இந்தப் படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் தினேஷ் சமர்த்துப்பிள்ளைதான். எனக்கு நன்கு தெரிந்தவர் என்பதால் அவரை நாயகனாக்கவில்லை.
"கதைப்படி, ஆட்டோ ஓட்டுநராக நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்துக்காக உடல் எடையை கொஞ்சம் அதிகரித்துள்ளார். அதனால் பாத்திரத்துடன் கச்சிதமாகப் பொருந்திவிட்டார்.
"தினேஷ் திறமையான நடிகர். காட்சிக்கான சூழ்நிலையைத் தெளிவாகப் புரியவைத்து விட்டால் போதும். பிரமாதமாக நடித்துவிடுவார். அதில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியிருக்காது.
"நேர நிர்வாகத்தில் அவரைப்போல் கச்சிதமாகச் செயல்படக்கூடிய இளையர்கள் மிகக்குறைவாகவே இருப்பார்கள். சொன்ன நேரத்துக்கு முன்பாகவே வந்து நிற்பார். படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் அவருக்கு உடனே 'தீனி' போட்டாக வேண்டும்.
"அந்த அளவுக்கு நடிப்புப் பசியோடு காத்துக்கிடப்பவர். அடுத்த காட்சி என்ன என்று கேட்டுக்கொண்டே இருப்பார்," என்று தினேஷைப் பாராட்டுகிறார் சுரேஷ் மாரி.
தினேஷ் பிள்ளை என்றால், ஊர்வசிதான் அம்மா. அவரைவிட வேறு எந்த நடிகையும் இந்த கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்பது இயக்குநரின் கருத்து. அதற்கான காரணத்தையும் விவரிக்கிறார்.
"ஊர்வசியால் மட்டுமே அழ வைக்கவும் உடனே சிரிக்கவும் முடியும். அவரால் பல பரிமாணங்களை வெளிப்படுத்த முடியும் என்பதை பலமுறை நிரூபித்துள்ளார். அவரை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.
"இன்று திரையுலகில் உள்ள மூத்த நடிகைகளால் அம்மா வேடத்தில் 'சீரியஸாக' நடிக்க முடியும். ஆனால், கூடவே நகைச்சுவையையும் வெளிப்படுத்த வேண்டும் என்று சொன்னால், அவர்களால் அவ்வாறு செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான். அதற்காக யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை.
"கதையை எழுத ஆரம்பித்தபோதே ஊர்வசி அம்மா மட்டுமே என்னுடைய தேர்வாக இருந்தார். அவருக்கும் கதையும் கதாபாத்திரமும் பிடித்திருந்ததால் நடிக்க சம்மதித்தார்.
"படத்தின் தலைப்பில் வரும் 'பேபி' அம்மா யாருக்கும் பயப்படாதவர். பிள்ளைகளைக் கண்டிக்கவும் செய்வார். அதே சமயம் குழந்தைத்தனமும் இருக்கும். அவருடைய அந்த ஆளுமையை திரையில் பார்க்கும்போது பிரம்மாண்டமாக இருக்கும்.
"கதை கேட்கும்போதே மிகுந்த ஈடுபாடு காட்டினார். நடிப்பிலும் அந்த ஈடுபாட்டை முழுமையாக வெளிப்படுத்தினார்.
"இப்படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் மாறன் நடித்துள்ளார். சென்னையைப் பின்புலமாகக் கொண்ட கதை என்பதால் அவர் நடித்தால் சரியாக இருக்கும் எனத் தோன்றியது.
"என் முடிவு சரி என்பதை படம் பார்க்கும்போது ரசிகர்களும் உணர்வார்கள். மற்ற கலைஞர்களும் சிறப்பாகப் பங்களித்துள்ளனர். படம் விரைவில் திரைகாணும்," என்கிறார் இயக்குநர் சுரேஷ் மாரி.

