திரைத் துளிகள்

திரைத் துளிகள்

3 mins read
5618bcb3-e653-49c6-ac19-49cf23416e28
-
multi-img1 of 3

 மறைந்த நடிகர் விவேக்கின் பெயரை சென்னையில் அவர் குடியிருந்த சாலைக்குச் சூட்டவேண்டும் என்று அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

விவேக் மறைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், விவேக்கின் மனைவி அருட்செல்வி, மகள் அமிர்தா நந்தினி இருவரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, இந்தக் கோரிக்கை தொடர்பான மனுவை அளித்துள்ளனர். முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

 அடுத்து 'தி ரோட்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார் திரிஷா. அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் ஐம்பது நாள்கள் நடைபெற உள்ளது. இப்புதிய படத்தில் சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. இதற்கிடையே திரிஷா நடிப்பில் அடுத்து 'பொன்னியின் செல்வன்' படம் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகிறது.

 விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 66' படத்தில் நடிகர் ஷாம் நடிப்பது உறுதியாகி உள்ளது. கதைப்படி அவர் விஜய்க்கு அண்ணனாக நடிக்கிறார். இத்தகவலை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். 'தளபதி 66' படத்தின் பாடல் காட்சி ஒன்றை அண்மையில் சென்னையில் படமாக்கினர். அதையடுத்து முக்கிய காட்சிகளை ஹைதராபாத்தில் எடுத்து வருகின்றனர்.

 நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்க ளில் நடிக்கத் தொடங்கி உள்ளார் மீரா ஜாஸ்மின். மலையாளப் படம் ஒன்றில் அவர் ஜெயராம் மனைவியாகவும் பதின்ம வயது பெண்ணுக்கு அம்மா வாகவும் நடித்துள்ளார். இது சத்யன் அந்திக்காடு இயக்கி உள்ள படம். இது குறித்து அண்மைய பேட்டி ஒன்றில், நடிகை ஊர்வசியின் வார்த்தைகளைத் தாரக மந்திரமாகப் பின்பற்றியே தாம் இவ்வாறு நடிக்க முடிவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார் மீரா.

"இந்தப் படத்தின் இயக்குநர் சத்யன் அந்திக்காடு எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். 17 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு தாயாக நடித்தார் ஊர்வசி. அப்போது அவரிடம், 'எப்படி தாயாக நடிக்க சம்மதித்தீர்கள்?' என்று கேட்டபோது, 'சத்யன் இயக்கும் படம் என்றால் பழம்பெரும் நடிகை சுகுமாரிக்குக்கூட தாயாக நடிப்பேன்' என்றார் ஊர்வசி. "அதை நான் இன்னும் மறக்கவில்லை. அதனால்தான் சத்யன் படத்தில் அம்மா வேடத்தில் நடிக்க சம்மதித்தேன்," என்று மீரா ஜாஸ்மின் கூறியுள்ளார்.

 தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்கள் பலரும் தாங்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பைத் தமிழகத்தில் நடத்துவ தில்லை என்றும் இதனால் தங்களது வேலை வாய்ப்பு பறிபோவ தாகவும் கோடம்பாக்க திரைப்படத் தொழிலாளர்கள் புகார் எழுப்பி உள்ளனர். பெரும்பாலான படப்பிடிப்புகள் ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில்தான் நடைபெறுகின்றன. இதனால் பிற மொழி தொழிலாளர்களுக்குத்தான் தமிழ்ப் படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது என்றும் தமிழகத் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போது விஜய், அஜித் ஆகிய இருவரது புதுப் படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. எனவே, அப்படங்களின் படப்பிடிப்பை சென்னைக்கு மாற்ற வேண்டும் எனத் தொழிலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.