"என் மகன் திரைப்படத்தில் நடித்துள்ளான் என்பதைவிட, அவனது தாத்தாவுடன் நடித்ததுதான் பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன்," என்கிறார் அருண் விஜய்.
'ஓ மை டாக்' படத்தில் அருண், அவரது மகன் அர்னவ், தந்தை விஜயகுமார் ஆகிய மூவரும் இணைந்து நடித்துள்ளனர். மூன்று தலைமுறையினரையும் இணைக்கும் கதைக்களம் கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம் என்றும் எதிர்பாராத பரிசு என்றும் சொல்கிறார்.
அர்னவ்வுக்கு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எப்போதுமே உண்டாம். ஜெயம் ரவி மகன் நடித்துள்ள படத்தைப் பார்த்ததும் தானும் நடிக்க வேண்டும் என்பதில் அர்னவ் உறுதியாக இருந்ததாகச் சொல்கிறார்.
"நாங்கள் திட்டமிட்டு இந்தப் படத்தில் நடிக்கவில்லை. மேலும், இது தனிப்பட்ட விருப்பம் என்றும் எதுவும் இல்லை. எல்லாமே எதேச்சையாக நடந்தது. அர்னவின் நடிப்பு ஆர்வத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.
"எங்கள் குடும்பத்தில் பெரும்பாலானோர் திரைத்துறையில் இருக்கிறோம். அதனால் அர்னவ்வுக்கும் இயல்பாகவே அந்தத் துறையில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை," என்கிறார் அருண் விஜய்.
தமது படப்பிடிப்புகளுக்கு மகனையும் அழைத்துச் செல்வது இவரது வழக்கமாக உள்ளது. தந்தையின் சண்டைக்காட்சிகளை அர்னவ் விரும்பிப் பார்ப்பதும் வழக்கம். இவை எல்லாம் தன் மகன் மனதில் நடிப்பின் மீதான ஆசையை அதிகரித்திருக்கும் என நம்புவதாகச் சொல்கிறார் அருண்.
"நானும் என் மகனும் மணிக்கணக்கில் சினிமா குறித்துப் பேசுவோம். பள்ளிக்கு விடுமுறை என்றால் அர்னவ்வை தொலைக்காட்சிக்கு முன்புதான் பார்க்க முடியும். விடிய விடிய தனக்குப் பிடித்தமான படங்களைப் பார்ப்பதுடன், அதுகுறித்து என்னுடன் விவாதிப்பான்.
"படிப்பை முடித்த பிறகு சினிமாவில் உள்ள இந்த ஆர்வம் நீடித்தால் நானும் என் மனைவியும் அதற்கு எதிராக நிற்க மாட்டோம். அது அர்னவ்வுக்கும் தெரியும்.
தமக்கு திரையுலகில் திடீரென ஏற்பட்ட பெரிய இடைவெளி குறித்து அருண் விஜய் அதிகம் பேசுவதில்லை. எனினும், அந்த காலக்கட்டத்தில் தம்மை திரையுலகுக்காக மேலும் தீவிரமாக தயார்படுத்திக்கொள்ள முடிந்தது என்கிறார்.
"எந்தவொரு விஷயத்தையும் சாதிக்க வேண்டும் என்று நினைத்தோமானால் நம் கவனம் முழுவதும் அதன் மீதுதான் குவிந்திருக்க வேண்டும்.
"எனக்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற கோபமும் விரக்தியும் மனதை முழுமையாக ஆக்கிரமித்திருந்த நேரமது. எந்நேரமும் உடற்பயிற்சியிலும் ஏதாவது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தேன்.
"நிச்சயம் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை மட்டும் மனதை விட்டு அகலவில்லை. எனினும் அன்று நான் கற்றுக்கொண்ட பல விஷயங்கள் இப்போது எனக்கு பயன்படுகின்றன.
"எங்களுடையது சினிமா குடும்பம் என்பதால் திரையுலகில் நுழைவது மட்டுமே எளிதாக இருந்தது. அதன் பிறகு முழுக்க என் உழைப்பின் உதவியோடுதான் இன்று உள்ள நிலையை எட்டிப் பிடித்திருக்கிறேன்.
அதிர்ஷ்டத்தை நான் பெரிதாக நம்பியதில்லை. எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனால், அப்படிப்பட்ட வாய்ப்புகள் தேடி வந்தபோது மறுக்காமல் நடித்தேன்.
"ஹரி இயக்கத்தில் நான் நடித்துள்ள 'யானை' திரைப்படம் என்னை சினிமாவின் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என நம்புகிறேன். நான் கிராமத்துக் கதைக்களத்தில் நடித்து நீண்ட நாட்களாகிவிட்டது. அதுபோன்ற ஒரு கதையை எனக்காக உருவாக்கியுள்ளார் ஹரி," என்கிறார் அருண் விஜய்.

