நடிகர் அஜித்திடம் தமக்கு மிகவும் பிடித்த விஷயம் அவரது துணிச்சலும் நேர்மையும்தான் என்கிறார் இயக்குநர் 'சிறுத்தை' சிவா.
அஜித்தின் நட்பு கிடைத்ததை தாம் பெரிய விஷயமாகக் கருதுவதாகவும் கூறுகிறார்.
"அஜித் மிக அன்பான மனிதர். அவருடைய வழிகாட்டுதல் எனக்குப் பெரிய வரம். அஜித்தின் துணிச்சலுக்குப் பல சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
"'வீரம்' படத்துக்காக ரயிலில் ஒரு காட்சியைப் படமாக்கினோம். அஜித் சாரிடம் கதை சொல்லும்போது, ரயிலுக்கு வெளியே கதாநாயகன் தொங்கிக்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் படப்பிடிப்பின்போது மிகவும் ஆபத்தாகத் தோன்றியது. அதனால் 'டூப்' போட்டுவிடலாம் என்று கூறினேன்.
"ஆனால் அஜித்தோ, 'நீங்கள் கதை சொன்னபோது குறிப்பிட்டதைப் போலவே காட்சியை எடுக்கலாம் என்று கூறிவிட்டார். அந்தக் காட்சிக்கான ஒத்திகையின்போது குறிப்பிட்ட ஓரிடத்தில் 350 அடி ஆழமான பகுதியை ரயில் கடக்க வேண்டியிருந்தது. நான் பயந்துவிட்டேன்.
"ஆனால் அவரோ, என்னை முந்திக்கொண்டு, 'இந்த இடத்தில் காட்சியைப் படமாக்கலாம்' என்றார். ஒருவருக்கு இவ்வளவு துணிச்சல் இருக்க முடியுமா என்று வெகுவாக ஆச்சரியப்பட்டேன்.
"அதேபோல 'விவேகம்' படத்தில் ஒரு பெரிய கட்டடத்தில் இருந்து கயிறு கட்டிக்கொண்டு கீழே இறங்குவது போன்ற காட்சி. மிக ஆபத்தான சூழ்நிலையில் சிறிதும் தயக்கமின்றி நடித்தார்.
"நான் வேண்டாம் என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. பலமுறை இதற்காக அவருடன் வாக்குவாதம் செய்துள்ளேன். ஆனால் எப்படியாவது நம்மை சமாதானப்படுத்திவிடுவார்.
"'ஆலுமா டோலுமா' பாடலைப் படமாக்கியபோது, ஏற்கெனவே அவருக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் அடிபட்டுவிட்டது. வலியில் கண்கள் கலங்கிவிட்டன. அந்த வலியோடு தமக்குத் தாமே முதலுதவி செய்துகொண்டார்.
"பிறகு மருத்துவர் வந்ததும், அவரைப் பரிசோதித்துவிட்டு, அன்று முழுவதும் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார். ஆனால் அஜித்தோ, ஒருநாள் படப்பிடிப்பு வீணாகிவிடக்கூடாது என்பதால் பாடல் காட்சி முழுவதும் அதிகமான நடன அசைவுகள் இன்றி நின்றுகொண்டே நடித்தார். அந்த அளவுக்கு அர்ப்பணிப்பு உணர்வு உள்ள அவருக்கு நாளை பிறந்தநாள். அவருக்கு என் வாழ்த்துகள்," என்கிறார் சிவா.

