படப்பிடிப்பின்போது நடிகர், நடிகைகள் தனிப்பட்ட சிரமங்களைப் பொருட்படுத்தாமல் நடிக்க வேண்டும் என்கிறார் இளம் நடிகை ரித்விகா.
அண்மையில் 'ஆதார்' என்ற படத்தின் படப்பிடிப்பில் கடும் கொசுக்கடி, பூச்சிக்கடிக்கு மத்தியில் நடித்தாராம். அந்த அனுபவத்தை ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்துள்ளார்.
முழுநீள திகில் படமாக உருவாகி வருகிறது 'ஆதார்'. சில காட்சிகளை சென்னையின் புறநகர்ப் பகுதியில் கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தில் படமாக்கி உள்ளனர். சிறிய மருத்துவமனையைப் போல் அந்த இடத்தை மாற்றி அமைத்திருந்தனராம்.
"அந்தக் காட்சிகளை இரவு நேரத்தில் படமாக்கினர். அதனால் கட்டுமானப் பணியாளர்கள் தங்கள் வேலை முடித்து கிளம்பிச் சென்ற பிறகே படப்பிடிப்பை நடத்த முடிந்தது.
"அப்போது மழைக்காலம் என்பதால் எப்போது மழை பெய்யும் எப்போது நிற்கும் என்று கணிக்க முடியாத சூழல். போதாத குறைக்கு கட்டுமானப் பணி நடக்கும் இடம் என்பதால் சிமென்ட் மூட்டைகள், இரும்புக் கம்பிகள், ஜல்லிக் கற்கள் எல்லாம் குவிக்கப்பட்டு இருந்தன.
"மேலும், தரையும் கரடுமுரடாக இருந்தது. கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் கால்களைப் பதம் பார்த்துவிடும். உண்மையாகவே கட்டுமானப் பணிகள் நடக்கும் இடத்தில் முதன்முறையாகப் படப்பிடிப்பில் பங்கேற்றேன்.
"அங்கு ஏராளமான கொசுக்கள் வலம் வந்தன. வேறு சில பூச்சிகளையும் காண முடிந்தது. பொதுவாக, வெளிப்புறப் படப்பிடிப்பு என்றால் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க, மருத்துவ திரவம் ஒன்றை கைகளிலும் முகத்திலும் பூசிக்கொள்வோம். ஆனால் இந்த இடத்தில் அதையும் மீறி கொசுக்கள் கடித்துத் தீர்த்தன.
கதைப்படி நான் அந்தக் கட்டடத்தில் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பேன். இதற்காக சிறிய மருத்துவமனையில் உள்ள வார்டு போல் சித்திரிக்க இரண்டு வரிசை படுக்கைகளை போட்டிருந்தனர். கூடவே சில மின் விசிறிகளையும் சுழல விட்டனர். அதனால் கொசுத்தொல்லையை ஓரளவு சமாளிக்க முடிந்தது," என்கிறார் ரித்விகா.
பிரசவத்துக்குப் பிறகு கைக்குழந்தை இவருக்கு அருகே கிடத்தப்பட்டிருப்பது போன்று காட்சியைப் படமாக்கி உள்ளனர். ஏற்கெனவே தனது சகோதரியின் குழந்தையைக் கவனித்துக்கொண்ட அனுபவம் இருந்ததால், தாய்-சேய் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ரித்விகாவால் இயல்பாக நடிக்க முடிந்திருக்கிறது.
"அதுமட்டுமல்ல, அந்தக் குழந்தையின் தாயும் படப்பிடிப்பின்போது உடன் இருந்தார். இன்னோர் ஆச்சரியமான விஷயம், அவருக்கும் அண்மை யில்தான் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
"அதனால் ஒரு குழந்தை அழுதால், உடனே எனக்கு அருகே உள்ள படுக்கையில் படுத்திருக்கும் அவர், அழும் குழந்தையை தூக்கிக்கொள்வார். மற்றொரு குழந்தை என்னருகே வந்துவிடும்.
"இப்படி இரு குழந்தைகளும் மாறி மாறி நடித்தன. அதனால் படப்பிடிப்பும் இரு தினங்கள் தடையின்றி நடந்தேறியது.
"அந்த இரண்டு நாள்களையும் மறக்கவே இயலாது. அதிலும் அந்த அழகான இரு குழந்தைகளின் முகங்களும் இன்னும் கண்முன்னே தெரிகின்றன," என்கிறார் ரித்விகா.
கொசுக்கடிக்கு எல்லாம் பயந்தால் சவாலான பாத்திரங்களில் நடிக்க இயலாது என்று குறிப்பிடுபவர், சவால்கள் இல்லாமல் சாதிக்க இயலாது என்கிறார். பல முன்னணி நடிகைகள்கூட இப்போதெல்லாம் சண்டைக் காட்சிகளிலும் மற்ற ஆபத்தான காட்சிகளிலும் பங்கேற்பதை சுட்டிக்காட்டு கிறார்.
'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட நடிகையாக மாறிவிட்டாலும் சிறப்பான நடிப்புக்காக மக்கள் தன்னை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் ரித்விகாவின் விருப்பமாக உள்ளது.
"அதனால்தான் நல்ல கதா பாத்திரங்கள் என்றால் அது சிறிது நேரமே திரையில் தோன்றும் என்றா லும்கூட ஒப்புக்கொள்கிறேன். அதே சமயம் குறைந்த செலவில் தயாராகும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நாயகிக்கு இணையான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறேன்.
"குறிப்பிட்ட சில நல்ல கதாபாத்திரங்கள் என்னைத் தேடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. காரணம், இத்தகைய வாய்ப்புகளை நமது திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகக் கருத வேண்டும்," என்கிறார் ரித்விகா.

