தெலுங்கில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் முத்தக்காட்சியில் நடித்தது ரசிகர்களை வாய்பிளக்க வைத்தது.
இந்நிலையில், ரன்வீர் சிங் ஜோடியாக 'ஜெயேஸ்பாய் ஜோர்தார்' என்ற இந்திப் படத்தில் நடித்து முடித்துள்ளார் ஷாலினி.
இதன் முன்னோட்டக் காட்சித்தொகுப்பு வெளியீட்டு விழாவில் பேசிய அவர், சினிமா ஆசையால் தாம் வீட்டை விட்டு வெளியேறியதாகக் குறிப்பிட்டு லேசாகக் கண்கலங்கினார்.
"நான் பொறியியல் பட்டதாரி ஆக வேண்டும் என என் தந்தை விரும்பினார். நானும் அதற்கு முயன்றேன். ஆனால் படிக்கப் பிடிக்கவில்லை.
"சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. இதற்காக பெற்றோரின் சம்மதம் பெற நான்கு ஆண்டுகள் முயன்றேன். ஆனால் அது நடக்கவில்லை என்பதால் வீட்டை விட்டு வெளியேறினேன். முதலில் என்னை ஒதுக்கிய என் குடும்பத்தார் இப்போது நான் அடைந்துள்ள உயரத்தைக் கண்டு பெருமைப்படுவார்கள் என நம்புகிறேன்," என்றார் ஷாலினி பாண்டே.