'கதிர்' என்ற படத்தின் மூலம் கோடம்பாக்கத்தில் அறிமுகமாகி உள்ளார் பாவ்யா த்ரிகா. ஏற்கெனவே கன்னட படத்தில் நடித்தவர்.
விளம்பரப் படங்களில் நடித்து வந்த இவரை, முதலில் அடையாளம் கண்டுகொண்டது கன்னடத் திரையுலகம்தான். அங்கிருந்து பாவ்யாவை தமிழ்த் திரையுலகத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.
முதல் படத்திலேயே தன் நடிப்புக்காக பாராட்டு பெற்றுள்ள பாவ்யாவுக்கு பல மொழிகள் அத்துப்படியாம். சிறு வயது முதலே சினிமா நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்து ஆளாகியுள்ளார்.
பஞ்சாபி பெண்ணான இவர், பிறந்து வளர்ந்த இடம் சென்னை. அதனால் பஞ்சாபி மொழியை தவிர்க்க முடியவில்லை.
"நான் கிட்டத்தட்ட தமிழ்ப் பெண்ணாகத்தான் வளர்ந்திருக்கிறேன். மெரினா கடற்கரை, சத்யம் திரையரங்கு, சிந்தாதரிப்பேட்டை என்று சென்னையில் எனக்குத் தெரியாத இடங்களே இல்லை. அந்த வகையில் என்னை சென்னைப் பெண் என்றும் சொல்லலாம். பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு நான் சென்னையில் உள்ள கல்லூரியில்தான் ஊடகத்துறையில் பட்டப்படிப்பை முடித்தேன்.
"கல்லூரியில் எனக்கு மூத்தவர்கள் பலர் இன்று தொலைக்காட்சித் தொடர்கள், நிகழ்ச்சிகள், திரைப்படத் துறையில் அசத்தி வருகிறார்கள்.
"மாடலிங், சினிமாத்துறையில் சாதிக்க விரும்பும் பெண்களுக்கு அவர்களது குடும்பத்தார், குறிப்பாக தந்தைதான் முதல் எதிர்ப்பாளர்களாக இருப்பார்கள். ஆனால் என் விஷயத்தில் இது தலைகீழாகிவிட்டது.
"நான் ஊடகத்துறையில் வருவதற்கு அப்பாதான் முக்கிய காரணம். அவர் அரசு அதிகாரியாக பணியாற்றினார். விளம்பரங்கள், திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று பெரும் ஆர்வம் இருந்தது. ஆனால், வேலைப்பளுவால் அவரது ஆசை நிறைவேறவில்லை.
"எனினும், 'நீதானே என் பொன் வசந்தம்' படத்தில் சமந்தாவுக்கு தந்தையாகவும் 'விஸ்வரூபம்' படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதியாகவும் என சின்னச் சின்ன கதாபாத்திரங்கள், விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.
"அவரைப் பார்த்துத்தான் கதாநாயகி ஆகவேண்டும் என்ற ஆவல் எனக்கு உருவானது. அதைப் புரிந்துகொண்ட அப்பா, அவரது சினிமா கனவை என் வழியாக நிறைவேற்றிப் பார்க்க விரும்பினார்.
"நான் சிறுமியாக இருக்கும்போதே என்னை விளம்பரப் படங்களில் நடிக்க வைத்தது அவர்தான். எட்டு வயதிலேயே விளம்பரப் படங்கள் மூலம் நான் பிரபலமாகிவிட்டேன். இப்போது என் ஆசைப்படி சினிமா நடிகையாகிவிட்டேன்," என்கிறார் பாவ்யா.
திரையுலகில் முதலில் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்போவதாக குறிப்பிடுபவர், விருது, நடிகைகளில் முதலிடம் என்பன போன்ற எதிர்பார்ப்புகள் எல்லாம் இப்போதைக்கு தமக்கு இல்லை என்கிறார்.
சென்னைப் பெண்ணாக, தமிழ் பேசி வளர்ந்த தமக்கு, கோலிவுட் ரசிகர்களின் ஆத ரவு கிடைக்கும் என்றும் நம்பிக்கை உள்ளதாம்.
இவர் நடித்துள்ள கன்னடப் படம் விரைவில் வெளியாக உள்ளது. தமிழில் அடுத்து நடிக்கும் படம் தொடர்பான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.