நாயகனாக நடித்து வரும் நிலையில், வில்லனாக நடிக்க ஜெய் எப்படி ஒத்துக்கொண்டார் என்று கோடம்பாக்கத்தில் பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
மிகுந்த தயக்கத்துடன்தான் வில்லனாக நடிக்க முடியுமா என்று ஜெய்யிடம் கேட்டுள்ளார் இயக்குநர் பத்ரி. ஜெய்யும் முதலில் லேசாகத் தயங்கியுள்ளார். ஆனால் படத்தின் முழுக்கதையையும் கேட்ட பிறகு அந்தக் தயக்கம் மறைந்து, உடனே 'அண்ணே நான் நடிக்கிறேன்' என்றாராம்.
"என்னதான் வில்லத்தனமான கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் ஜெய்யை நேசிப்பார்கள். அப்படித்தான் அவரது பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 'பட்டாம்பூச்சி' என்ற தலைப்பையும் அவர் தோள் மீதுதான் சுமத்தி உள்ளோம். கதைப்படி நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவராகத் திரையில் தோன்றுவார்.
"பொதுவாக நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை கை கால் நடுங்கும். அவ்வாறு உடலசைவுகள் ஏற்படும்போது வார்த்தைகளும் தடுமாற்றமாகத்தான் வந்துவிழும். 'நான் கிளம்புகிறேன்', பிறகு வருகிறேன்' என்பன போன்ற ஒன்றிரண்டு வார்த்தைகளை உச்சரிப்பதற்கும்கூட அவகாசம் தேவைப்படும். சின்ன வார்த்தையை நீளமாக இழுத்து இழுத்துப் பேசுவார்கள்.
"இதுபோன்ற சவாலான கதாபாத்திரத்தை ஜெய் இதுவரை ஏற்றதில்லை. இது சினிமாவுக்காகச் சொல்லப்படும் கற்பனை வியாதி அல்ல. உலகம் முழுவதும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்," என்கிறார் பத்ரி.
தனது கதாபாத்திரத்தின் தன்மையைப் புரிந்துகொண்ட ஜெய், உடனடியாக இத்தகைய பாதிப்பு உள்ள சிலரை நேரில் சந்தித்தாராம். அவர்களிடம் இந்நோயின் தாக்கம் குறித்து கேட்டறிந்துள்ளார். மேலும், நோயாளிகளிடம் காணப்படும் அறிகுறிகள், அவர்கள் பேசும் விதம், உடல்மொழி என அனைத்தையும் கவனித்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கியதும் நரம்பு பாதிப்பு குறித்து தனக்கு விரிவாக விளக்கி, பயிற்சியும் அளிக்க ஒரு பயிற்றுவிப்பாளரைப் பணி அமர்த்தும்படி கேட்டுக்கொண்டாராம்.
"நரம்புப் பிரச்சினை உள்ளவர்களுக்கு அடிக்கடி உடலின் ஏதாவது ஒரு பகுதியில் வலி ஏற்படும். நரம்பு இழுத்துக்கொண்டால் மிகுந்த வேதனையாக இருக்கும். கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டால் தவித்துப் போவோம். ஆனால் ஜெய், இந்தப் படத்துக்காக தினமும் அந்த வலியைப் பொறுத்துக்கொண்டார்.
"இப்படத்தில் உடல் வலிமையில் குறைபாடு உள்ள ஜெய் அறிவுத்திறன் உள்ளவராக இருப்பார். அப்படி கெட்ட புத்தி உள்ள ஜெய்யை நல்ல புத்திக்காரரான காவல்துறை அதிகாரி சுந்தர்.சி எப்படி வெற்றிகொள்கிறார் என்பதே கதை. எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் படத்தை உருவாக்கி உள்ளோம்," என்கிறார் இயக்குநர் பத்ரி.
'பட்டாம்பூச்சி' படத்தின் முதல் காட்சிலேயே கதை தொடங்கிவிடும் என்று குறிப்பிடுபவர், படத்தின் இறுதிக்காட்சிவரை விறுவிறுப்பு குறையாது என உத்தரவாதம் அளிக்கிறார். மேலும், குற்றவாளி செய்யும் தவறுகளைக் காவல்துறை அறிவாற்றலுடன் செயல்பட்டுக் கண்டுபிடிக்கும் காட்சிகள் சுவாரசியமாக இருக்குமாம்.
"பொதுவாக மாற்றுத்திறனாளிகள், கூடுதல் மனவலிமை உள்ளவர்களாக இருப்பார்கள். உதாரணத்துக்கு, பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு செவித் திறன் அதிகமாக இருக்கும். இது இறைவன் கொடுத்த ஆற்றல்.
"எனவே எந்த அளவுக்கு வலி, வேதனைகளை எதிர்கொள்கிறாரோ, அதற்கு இணையாக தனது மன வலிமையையும் நடிப்பில் வெளிப்படுத்தி உள்ளார் ஜெய்.
"அவர் எனக்குத் தம்பி மாதிரி. பல ஆண்டுகளாகப் பழகி வருகிறோம். முன்பு 'ஆக்ஷன்' படத்துக்கு நான் வசனம் மட்டுமே எழுதினேன்.
"பட்டாம்பூச்சி' படத்தின் வெற்றி என்னைப் பெரிய நடிகர்களிடம் அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதுமட்டுமல்ல, நல்ல கதைகள்தான் பெரிய நாயகர்களிடம் நம்மை அழைத்துச் செல்லும் என்பதையும் உணர்ந்துள்ளேன்.
"'பட்டாம்பூச்சி' படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு எனக்கு அண்ணி. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சுந்தர்.சி. சாருடன் இருக்கிறேன். அவர்தான் என்னுடைய குருநாதர். குடும்ப அட்டையில் மட்டுமே எனது பெயர் இல்லை. மற்றபடி, அவருடைய குடும்பத்தில் நானும் ஒருவன்," என்று பாசம் ததும்ப பேசுகிறார் பத்ரி.
, :