விமலைத் தேடி மீண்டும் புதுப்பட வாய்ப்புகள் வருகின்றன. சில இணையத் தொடர்களில் நடிப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறார்.
இந்நிலையில், 'தெய்வ மச்சான்' என்ற தலைப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். இது அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகும் படமாம்.
எனினும் இதேபோன்ற கதைக் களத்துடன் உருவான படங்களில் இருந்து இது மாறுபட்ட படைப்பாக இருக்குமாம்.
"படத்தின் முதல் பாதியில் தன் தங்கை மீதான பாசத்தை நாயகன் எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பதை விவரித்துள்ளோம். இரண்டாவது பாதியில் தன் தங்கையின் திருமணத்துக்காக அண்ணன் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை சுவாரசியமாக காட்சிப்படுத்தி உள்ளோம்," என்கிறார் இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார்.
'பிக்பாஸ்' புகழ் அனிதா சம்பத் தான் விமலின் தங்கையாக நடிக்கிறார். கதைப்படி ஒரு குதிரையும் முக்கிய கதாபாத்திரமாக சித்திரிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணத்தை படம் பார்க்கும்போது ரசிகர்களால் புரிந்துகொள்ள முடியும் என்கிறார் இயக்குநர்.
முழுப் படத்தையும் திண்டுக்கல்லில் படமாக்குகின்றனர். விமலுக்கு ஜோடியாக நேகா என்ற மேற்குவங்க இளம் நடிகை ஒப்பந்தமாகி உள்ளார். அனிதா சம்பத்துக்கு இணையாக வத்சன் வீரமணி நடிக்கிறார்.
"நேகா தமிழ் ரசிகர்களுக்குப் புதியவர் அல்ல. ஏற்கெனவே தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். உணர்வுபூர்வமான காட்சிகளில் திறம்பட நடிக்கக் கூடியவர். நகைச்சுவை யிலும் அசத்துகிறார். அதனால் விமலுக்குப் பொருத்தமாக இருப்பார் எனக் கருதி ஒப்பந்தம் செய்தோம். எங்கள் கணிப்பும் எதிர்பார்ப்பும் வீண்போகவில்லை," என்கிறார் மார்ட்டின் நிர்மல் குமார்.