தமிழில் சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் அமையாவிட்டாலும், தெலுங்கிலும் இந்தியிலும் தமன்னாவுக்கு இன்றளவும் வரவேற்பு உள்ளது.
அண்மையில் ஒரு தெலுங்குப் படத்தில் ஒற்றைப்பாடலுக்கு நடனமாடி உள்ளார். அதையடுத்து, இந்தியில் உருவாகும் 'பப்ளி பவுன்சர்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மிக வித்தியாசமான கதைக்களம், கதாபாத்திரம் அமைந்திருப்பதால் தமக்கு இந்தப் படம் திரையுலகில் பெரும் திருப்புமுனையாக அமையும் என்று நம்புவதாகச் சொல்கிறார் தமன்னா.
முக்கிய பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பவர்களையும் கேளிக்கை விடுதி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்களையும் 'பவுன்சர்' என்று குறிப்பிடுகிறார்கள்.
ஒரே மாதிரியான சீருடை அணிந்து, நல்ல உடற்கட்டுடன் இருக்கும் இவர்களுக்கு கணிசமான ஊதியம் வழங்கப்படுகிறது. ஆண்கள் மட்டுமே ஈடுபட்டு வந்த இந்தத்துறையில், இப்போது பெண்களும் கால்பதித்துள்ளனர். ஒரு பெண் 'பவுன்சர்' பற்றிய கதையை மையமாக வைத்து, 'பப்ளி பவுன்சர்' உருவாகி உள்ளது.
"வடஇந்தியாவில் உள்ள அசோலா ஃபதேப்பூர் என்ற இடத்தை பவுன்சர் நகரம் என்றே குறிப்பிடுகிறார்கள். காரணம், அங்கு ஏராளமானோர் இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளனர்.
"அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண் பாதுகாவலர் தன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகளை இந்தப் படம் அலசுகிறது.
"இயக்குநர் மதுர் பண்டார்கர் குறித்து நான் தனியாகச் சொல்ல ஏதுமில்லை. நாட்டின் தலைசிறந்த இயக்குநர்களில் அவரும் ஒருவர். படப்பிடிப்பின்போது மட்டுமல்ல, எப்போதுமே என்னிடம் அன்பு பாராட்டக்கூடியவர். அவருடைய மகிழ்ச்சியான, நிதானமான செயல்பாடுகளால் எங்களால் சிறப்பாக நடிக்க முடிந்தது.
"இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் விலைமதிப்பற்ற நினைவுகளையும் படப்பிடிப்பில் கற்றுக்கொண்ட விஷயங்களையும் என்னோடு எடுத்து வந்திருக்கிறேன்.
"இந்தப் படம் எனக்கு நல்ல அனுபவமாக அமைந்துள்ளது. படப்பிடிப்பின்போது கிடைத்த ஊக்கம், பல்வேறு உணர்ச்சிகளை திரையில் வெளிப்படுத்த உதவியது. அருமையான நினைவுகள், அழகான நட்பு, அற்புதமான படக்குழு, மகிழ்ச்சியான நாள்கள் என்று இந்தப் படம் என் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும்," என்கிறார் தமன்னா.
'பப்ளி பவுன்சர்' இந்தியில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது.
தமிழில் மட்டும் படத்தின் தலைப்பை மாற்ற உள்ளனராம். சவுரப் சுக்லா, அபிஷேக் பஜாஜ், சாஹில் வய்த் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
பெண் பாதுகாவலர் பற்றிய கதை என்றதும் உடனே இதில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் தமன்னா.
மேலும், மதுர் பண்டார்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதும் தமது கனவாக இருந்தது என்கிறார்.
"இந்தியாவில் எந்த மொழியிலும் இத்தகைய கதைக்களத்துடன் ஒரு படம் உருவானதாக எனக்குத் தெரியவில்லை. தவிர, இது போன்ற கதாபாத்திரங்கள் அமைவது அரிதான விஷயம். அதனால் மிகுந்த ஆர்வத்துடன் நடித்தேன்.
"உண்மையில் இந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ப நிறைவான நடிப்பை என்னால் வழங்க முடியுமா என்ற சந்தேகமும் அச்சமும் மனதில் நிலவியது. ஆனால், இயக்குநர் மதுர் அனைத்தையும் மாற்றி அமைத்துவிட்டார். அவர் சொல்வதைக் கேட்டால் போதும். எல்லாம் நூறு விழுக்காடு சரியாக அமையும்," என்கிறார் தமன்னா.
தமிழ்த் திரையுலகை தாம் ஒதுக்கிவிட்டதாக கூறப்படுவது சரியல்ல என்று குறிப்பிடுபவர், நல்ல வாய்ப்புகள் அமைந்தால் எந்த மொழியிலும் நடிக்க தாம் தயார் என்கிறார்.
மேலும், ஒற்றைப் பாடலுக்கு நடனமாடுவது, சில நிமிடங்களே திரையில் தோன்றும் கதாபாத்திரம் என்றாலும், ரசிகர்களின் மனதைக் கவரும் எனில் அதில் நடிப்பது ஆகியவை தவறல்ல என்றும் அண்மைய பேட்டியில் கூறியுள்ளார் தமன்னா.

