சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டான்' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீடு பிரம்மாண்ட விழாவாக அரங்கேறி உள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் தமிழ்த் திரையுலகின் டான் என்றால் அது சிவகார்த்திகேயன்தான் என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் சிவாவைப் பாராட்டு மழையில் நனைக்க, அவரோ ரசிகர்களின் ஆதரவும் லைக்கா போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் இல்லையென்றால் தம்மால் திரையுலகில் வளர்ந்திருக்க முடியாது என்று நன்றியுடன் குறிப்பிட்டார்.
"இந்தப் படத்துக்கான பணிகளைத் தொடங்கியபோதே, தயாரிப்புத் தரப்புக்குப் பெரிதாக இல்லையென்றாலும், குறைந்தபட்ச லாபத்தைப் பெற்றுத் தரும் வகையில் தரமான படத்தை உருவாக்க வேண்டும் என முடிவு செய்தோம். அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தி உள்ளோம்.
"லைக்கா நிறுவனத்துக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. எனினும் அவர்களுடைய பங்களிப்பு உள்ள படங்கள் வெற்றிபெறும்போது மேலும் பல படங்களைத் தயாரிக்க அவர்கள் முன்வருவார்கள்,
"அதனால் திரையுலகில் பலருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பாக புதுமுகங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். 'டான்' படத்தை இயக்கியுள்ள சிபியும் அறிமுக இயக்குநர்தான்.
"இந்தப் படத்திலும் சமுத்திரக்கனி அண்ணனின் பங்களிப்பு முக்கியமானது. அவருடன் நடிக்கத் தொடங்கிய நாள் முதல் நேர்மறை சிந்தனைகளே என் மனதில் நிரம்பியிருக்கும். 'வா தம்பி... சேர்ந்து போராடலாம், வெற்றிபெறலாம்' என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.
"நம் கைப்பிடித்து முன்னே அழைத்துச் செல்வார். ஒவ்வொரு நாளும் நாம் ஏதாவது பிரச்சினையில், குழப்பத்தில் ஆழ்ந்திருப்போம். ஆனால் அவரைச் சந்தித்தால் அவை எல்லாம் மறைந்துபோகும். நம்பிக்கையுடன் செயல்படத் தொடங்கிவிடுவோம்," என்றார் சிவகார்த்திகேயன்.
இந்தப் படத்தில் தமக்கு அறிமுகப் பாடல் இருப்பதாலும், நாயகியுடன் காதல் பாடலைப் பாடுவதாலும் தாம் 'டான்' படத்தின் நாயகனாகிவிட முடியாது என்று குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால் அவர்களும்கூட கதாநாயகர்கள்தான் என்றார்.
"பிரியங்கா மோகன் சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு தமிழ் தெரியும் என்பதால் இயக்குநர் சொன்னதைப் புரிந்துகொண்டு நடிக்க முடிந்தது. மேலும் பாலா, ராஜு, ஷிவாங்கி, ஆர்ஜே விஜய் என எல்லோருமே சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.
"நாங்கள் அனைவரும் படப்பிடிப்பில் இருக்கும்போது கலகலப்பாக இருக்கும். எல்லோரும் சிரித்துப் பேசி, ஆர்வத்துடன் நடித்து, வேலையைச் செய்தோம். அந்த வகையில் இந்தப் படம் எனது கல்லூரி நாள்களை நினைவூட்டுவதாக அமைந்தது," என்றார் சிவா.
கல்லூரி நாள்களில் இவர் பலகுரலில் பேசும் கலைஞராக கல்லூரி வட்டாரங்களில் நன்கு அறிமுகமானவராக இருந்தார். அப்போது எஸ்.ஜே.சூர்யாவைப் போல் பேசினால் பலத்த கைதட்டல் கிடைக்குமாம். படப்பிடிப்பின்போது இதை அவரிடமே சொன்னேன். அதைக்கேட்டுப் பெரிதாகச் சிரித்தார்.
"அனிருத்தைப் பொறுத்தவரை இந்தப் படத்துக்காக அருமையான பாடல்களைக் கொடுத்துள்ளார்," என்றார் சிவா.
படத்தின் நாயகி பிரியங்கா பேசுகையில், தமக்கு பள்ளி நாள்கள் நினைவுக்கு வந்ததாகக் குறிப்பிட்டார்.
சிவாவின் கடின உழைப்பும் பண்புகளும் அவரைப் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என வாழ்த்தினார் எஸ்.ஜே.சூர்யா.
படத்தின் இசைப்பணியை விரைவாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் அனிருத் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. படக்குழுவைச் சேர்ந்த மற்ற அனைவரும் வந்திருந்தனர்.
"ரசிகர்கள் என்னை தங்கள் வீட்டுப் பிள்ளையாகக் கருதுகிறார்கள். அதற்காக எனது நன்றி. இன்றைய தேதியில் ஒரு படம் நன்றாக இருந்தால் நிச்சயம் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும். மொழி, மாநிலம், நாடு என்று எந்தவிதமான எல்லைகளும் ஒரு படத்தின் வெற்றியைத் தடுக்க வாய்ப்பில்லை. எல்லோருமே வெற்றிக்கான ஆர்வத்துடன்தான் உழைக்கிறோம். ரசிகர்கள் தொடர்ந்து ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது," என்கிறார் சிவகார்த்திகேயன்.

