திரையுலகம் இப்போது நல்ல நிலையில் இருப்பதாகச் சொல்கிறார் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் உருவாகி உள்ள 'டான்' படம் இன்று வெளியீடு காண்கிறது.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சிவா, தாம் தற்போது நடித்து வரும் 'அயலான்' படம் நாடு முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களைக் கவரும் வகையில் இருக்கும் என்றார்.
"சிபி சக்கரவர்த்தி 'டான்' படத்தை மிகச்சிறப்பாக இயக்கி உள்ளார். இந்தப் படம் மாணவர்களின் பிரச்சினைகளையும் கனவுகளையும் பற்றி பேசும் படைப்பாக உருவாகி உள்ளது.
"இதில் நான் கல்லூரி மாணவனாகவும் சில காட்சிகளில் பள்ளி மாணவனாகவும் நடித்திருக்கிறேன். "பள்ளி மாணவனாக நடிக்க கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தது. இயக்குநர் கூறியதை அடுத்து எட்டு கிலோ வரை எடை குறைத்தேன். அதன் பிறகு மாணவர் தோற்றத்துக்கு கச்சிதமாகப் பொருந்திப்போனேன்," என்றார் சிவகார்த்திகேயன்.
கல்லூரியில் படித்தபோது உடன் படித்த மாணவர்கள் இவரை 'டான்' என்று செல்லமாக அழைப்பார்களாம். அதை மனதில் வைத்திருந்து இந்தப் படத்துக்கு அதையே தலைப்பாக்கி உள்ளார் சிவா. மற்றபடி இவர் டான் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கவில்லையாம்.
"நண்பர்கள் சிலர் இதை எனக்கு நினைவூட்டினர். அதன் பிறகே இதை தலைப்பாக வைக்கலாம் என்று தோன்றியது.
"எனது முந்தைய இரண்டு படங்கள் வசூல் ரீதியில் வெற்றி பெற்றுள்ளன. இரண்டுமே நூறு கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் பெற்றதால் என்னுடைய சம்பளத்தை உயர்த்திவிட்டதாக சிலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அது தவறான தகவல். நான் இன்னும் சம்பளத்தை உயர்த்தவில்லை.
"எனக்கான சம்பளத்தை நிர்ணயிப்பது தயாரிப்பாளர்கள்தான். இவ்வளவு கொடுத்தால் கட்டுப்படியாகும் என யோசித்து தயாரிப்பாளர்கள்தான் தொகையை முடிவு செய்கிறார்கள்," என்றார் சிவகார்த்திகேயன்.
ஓடிடி தளங்கள் தவிர்க்க முடியாதவை என்று குறிப்பிட்ட அவர், குறைந்த செலவில் எடுக்கப்படும் சிறிய படங்களுக்கு ஓடிடி தளங்கள் மிகப்பெரிய ஆதரவை வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.
எனினும் ஓடிடி தளங்களுக்காக தயாரிக்கப்படும் படங்கள் அல்லது இணையத்தொடர்களில் தாம் நடிக்கப் போவதில்லை என்றும், இப்போதுள்ள சூழலில் தாம் பெரிய திரைகளுக்கான படங்களில் நடிப்பதற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாகவும் சொல்கிறார்.
"கண்டிப்பாக அதுதான் எனது இலக்கு. எனது படங்கள் திரையரங்குகளில் வெளியாவதற்குத்தான் முன்னுரிமை அளிப்பேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரையுலகம் இப்போது நன்றாக உள்ளது.
"கொரோனா நெருக்கடி குறைந்துவிட்டதால் மக்கள் இப்போது திரையரங்குகளுக்கு அதிகமாக வருகிறார்கள். நல்ல படங்களுக்கு ஆதரவும் தருகிறார்கள்.
"பெரும் பொருள்செலவில் உருவாகும் முன்னணி நடிகர்களின் படங்களை திட்டமிட்டு எடுத்தால் கண்டிப்பாக அது லாபம் தரும். பாடல் உரிமம், தொலைக்காட்சி உரிமம், ஓடிடி உரிமம் என சினிமா வியாபாரத்தின் தளம் விரிந்திருக்கிறது.
"ஒரு படம் எல்லா மொழி பேசும் மக்களால் விரும்பப்படும்போது அது உலகப்படம் ஆகிறது. இந்திய மக்களால் விரும்பப்படும்போது அது 'பான் இந்தியா' வகை படமாகிறது. எனது நடிப்பில் அடுத்து வரும் 'அயலான்' படம் அத்தகைய படைப்பாக இருக்கும்.
"அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கிறேன். அதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நான் ரஜினியுடன் நடிப்பதாக எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதுகுறித்து தயாரிப்புத் தரப்பில் இருந்து என்னிடம் யாரும் பேசவில்லை. அவருடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்தால் கட்டாயம் நடிப்பேன். அதில் சந்தேகமே வேண்டாம்," என்றார் சிவா.

