திரைத்துளி­கள்

திரைத்துளி­கள்

2 mins read

 முதிர்ச்சியும் பக்குவமும் உள்ள ஒருவருடன் நாள்களைக் கடத்துவது சிரமமான விஷயம் என்கிறார் பிரியா பவானி சங்கர். ஏனெனில் பக்குவமுள்ளவர்கள் உடனடியாக மன்னிப்பு கோரிவிடுகிறார்கள் என்று தமது அண்மைய இன்ஸ்டகிராம் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். "மன்னிப்பு கேட்பவர்களிடம் நமது கோபத்தை எப்படி வெளிப்படுத்த முடியும்?" என்று அந்தப் பதிவில் மேலும் கூறியுள்ளார். தற்போது தமிழில் தனுஷுடன் 'திருச்சிற்றம்பலம்', எஸ்.ஜே.சூர்யாவுடன் 'பொம்மை', கமலுடன் 'இந்தியன்-2', சிம்புவுடன் 'பத்து தல', ஜெயம் ரவியுடன் பெயரிடப்படாத புதிய படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் பிரியா.

 சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளார் தன்யா ரவிச்சந்திரன்.

இவர் சிபிராஜுடன் இணைந்து நடித்துள்ள 'ரங்கா' படம் விரைவில் திரைகாண உள்ளது. மேலும் இரண்டு தமிழ்ப் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில், மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் 'காட் ஃபாதர்' படத்தில் தன்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இப்படத்தில் ஏற்கெனவே பிருத்விராஜ், நயன்தாரா, பூரி ஜெகன்நாத் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். சிரஞ்சீவியுடன் இணைந்து நடிப்பது உற்சாகம் அளிப்பதாகச் சொல்கிறார் தன்யா.

 'மாயநதி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி, இப்போது படத் தயாரிப்பாளராகி உள்ளார். கவுதம் ராமச்சந்திரன் இயக்க, சாய் பல்லவி நடிக்கும் 'கார்கி' படத்தின் இணைத் தயாரிப்பாளர் இவர்தான். "அற்புதமான ஒரு கதையை தயாரிப்பதில் மகிழ்ச்சி. வருங்காலத்தில் நானும் இதுபோன்ற கதைக்களங்களில் நடிக்க விரும்புகிறேன். எனது சகோதரர் கோவிந்த் வசந்தா இப்படத்துக்கு இசையமைக்கி றார். படம் குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. அது வெளியான பின்னர் ரசிகர்கள் பேசுவதுதான் முக்கியம்," என்கிறார் ஐஸ்வர்யா.

 நடிகர் தனுஷ் திரையுலகில் அறிமுகமாகி இருபது ஆண்டுகள் நிறை வடைந்துள்ளன. இதையடுத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார்.

அதில், தாம் அறிமுகமான 'துள்ளுவதோ இளமை' படத்தில் நடித்தபோது, தமது திரைப்பயணம் இவ்வளவு தூரம் நீளும் எனக் கனவில்கூட நினைக்க வில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். "கடவுள் கருணை காட்டியுள்ளார். தொடர் அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது ரசிகர்களுக்கு என்னால் நன்றி என்ற சொல்லில் முடித்துவிட முடியாது.

"நீங்கள் எனது பலத்தின் தூண்கள். உலகெங்கிலும் உள்ள சினிமா ஆர்வலர்கள் தங்கள் நிபந்தனையற்ற அன்பை என் மீது பொழிந்ததற்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

"இயக்குநர் செல்வராகவனுக்கு நன்றி. ஏன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். என்னுள் இருக்கும் நடிகரை அடையாளம் காட்டிய என் தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு நன்றி.

"இறுதியாக நான் என் அம்மாவிற்கு நன்றி கூறுகிறேன். அவருடைய அன்றாட பிரார்த்தனைகள்தான் என்னைப் பாதுகாத்து இவ்வளவு தூரம் கொண்டு வந்தன. அவர் இல்லாமல் நான் ஒன்றுமில்லை," என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.