அனைவரும் எதிர்பார்த்ததைவிட பிரம்மாண்டமாக நடந்தேறி உள்ளது 'விக்ரம்' இசை வெளியீடு. இசை அமைப்பாளர் அனிருத், நடிகர்கள் விஜய்சேதுபதி, சிலம்பரசன், நரேன், உதயநிதி, இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ரஜினியும் வருவார் என எதிர்பார்க்கப்பட்டாலும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக சிம்பு வந்திருந்தார்.
இந்நிகழ்வில் பேசிய விஜய் சேதுபதி,
முதல் முறையாக கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
"கமல் சாருடன் நடிப்பேன் என்று கனவில்கூட நினைத்ததில்லை. நான் பேச ஆரம்பித்த பிறகுதான் அவரது பேச்சை கவனிக்க ஆரம்பித்தேன். அவரது பேச்சில் ஒருவித பொறுப்புணர்வும் ஆழமும் இருக்கும். மூன்று முறை அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளேன். தாம் பெரிய அனுபவசாலி என்ற தலைக்கனம் அவரது பேச்சில் இருக்காது," என்றார் விஜய் சேதுபதி.
படப்பிடிப்புக்கு மத்தியில் கமலும் அமர்ந்து பேசியதெல்லாம் தமது பாக்கியம் என்று குறிப்பிட்ட அவர், 'கமல் 60' நிகழ்ச்சியில் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததை நினைவுகூர்ந்தார்.
"அந்த ஆசை நிறைவேறிவிட்டது. அடுத்து அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. உங்கள் எழுத்தின் மிகப் பெரிய ரசிகன் நான். அது நடக்க வேண்டும் என இயற்கையை வேண்டிக்கொள்கிறேன்," என்றார் விஜய் சேதுபதி.
நிகழ்ச்சியின் நாயகனான இசை அமைப்பாளர் அனிருத், தமது இசையில் கமல்ஹாசன் பாடியதை பெருமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
'இந்தியன்-2' படத்துக்கு இசை அமைக்க கிடைத்த வாய்ப்பு முழுமை பெறாமல் போன வருத்தத்தில் இருந்த போதுதான், இயக்குநர் லோகேஷ் தமக்கு 'விக்ரம்' பட வாய்ப்பைத் தந்ததாக அவர் தெரிவித்தார்.
"இந்தப் படத்தில் கமல் சார் பாடியுள்ள 'பத்தல பத்தல' பாடல் ஒலிப்பதிவு இரண்டு நாள்கள் நடைபெற்றது. ஒரு மாதத்துக்கு முன்பே பாடல் வரிகளை அனுப்பிவிட்டார் கமல். தமிழில் பாடி முடித்ததும் தெலுங்கு வரிகளைப் பார்வையிட்டு, அதில் பிழை இருக்கிறதே என்று கண்டுபிடித்தார். பிறகு அவரே அதைச் சரிசெய்து பாடினார்.
"'மாஸ்டர்' 50 விழுக்காடு லோகேஷ் படம். ஆனால், 'விக்ரம்' படம் முழுக்க முழுக்க கமல் சாரின் ரசிகனாக லோகேஷின் சம்பவம்.
"எந்தவோர் இசை வெளியீட்டு விழாவிலும் ஒரு படத்தின் வெற்றி குறித்து பேசமாட்டேன். ஆனால், இந்தப் படம் நிஜமாகவே உலகம் முழுக்க வெற்றிபெறும்" என்றார் அனிருத்.
அடுத்து பேசிய நடிகர் சிம்பு, வாழ்க்கையில் தன் தந்தையை குருவாக கருதுவதாகவும் திரைத்துறையில் கமல்தான் தமது குரு என்றும் குறிப்பிட்டார்.
"முன்பெல்லாம் நான் ஐந்து மணிக்கு எழுந்திருக்க மாட்டேன். ஆனால், கமலின் 'விஸ்வரூபம்' படத்துக்குப் பிரச்சினை ஏற்பட்டபோது அதிகாலையில் எழுந்து, நாள் முழுவதும் கமல் சாருடன் இருந்ததை மறக்கவே மாட்டேன்.
"இந்தப் படத்தின் முன்னோட்டக்காட்சித் தொகுப்பைப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன். நிச்சயம் படம் வெற்றி பெறும். இத்தனை நடிகர்களை வைத்து படம் இயக்குவது எளிதல்ல. லோகேஷ் அதை சாதித்திருக்கிறார். விஜய்சேதுபதி என் நண்பர். மலையாளத்தில் பகத் ஃபாசில் போல் தமிழில் விஜய் சேதுபதி அசத்துகிறார்," என்றார் சிம்பு.
தாம் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்று குறிப்பிட்டார் 'விக்ரம்' படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக தாம் மேற்கொண்ட கடும் முயற்சிகளும் உழைப்பும்தான் கமலிடம் தம்மைக் கொண்டுவந்து சேர்த்ததாக அவர் கூறினார்.
"முன்பெல்லாம் கமல் சார் வீட்டு வாசலில் காத்திருப்பேன். அவர் என்றாவது ஒரு நாள் நின்று என்னை நோக்கி கையசைப்பார் என்று எதிர்பார்த்து நிற்பேன். கடவுளிடம் அதற்காக வேண்டிக்கொள்வேன். இன்று அந்த ஆண்டவர் இந்த (கமல்) ஆண்டவருடன் இணைந்து பணியாற்ற வைத்துள்ளார். நான் சினிமாவுக்கு வர காரணமே கமல்தான்.
"இந்தப் படத்தின் இறுதிக்காட்சிக்காக படப்பிடிப்பு நடந்தபோது, காட்சியின் தேவை கருதி சில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தார். அதைக் காணொளியாகப் பதிவு செய்துள்ளேன். இந்த வயதில் கொரோனா தாக்குதலுக்குப் பிறகு அவர் உழைப்பதைப் பார்க்கும்போது நாம் செய்வதெல்லாம் வேலையே இல்லை என்று தோன்றுகிறது," என்றார் லோகேஷ்.
இறுதியில் பேசிய கமல்ஹாசன், தமது ரசிகராக லோகேஷ் தன்னை வைத்து படம் இயக்கி இருப்பது தனக்குத்தான் பெருமை என்றார். மேலும், இந்தக் கூட்டணி தொடரும் என்றும் குறிப்பிட்டார்.
"நான் 22 வயதில் வேலை செய்ததுபோல், விஜய்சேதுபதி தமது 44 வயதில் உழைத்துக்கொண்டிருக்கிறார். நான் அந்த வயதில் ஒரு வருடத்தில் எத்தனை படங்கள் நடித்தேனோ அது போல விஜய் சேதுபதி இப்போது ஓடிக்கொண்டிருக்கிறார்.
"இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுவது குறித்து பலரும் கேட்கிறார்கள். அரசியலைக் கடந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் எனது நண்பர். நானும் ரஜினியும் திரையுலகில் பணியாற்றியபடி நண்பர்களாகவே நீடிக்கிறோம். இளம் வயதில் ஒருவருக்கு எதிராக மற்றொருவர் பேசி இருக்கக்கூடும். ஆனால், இருவருக்கும் இடையிலான நட்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை 25 வயதில் முடிவு செய்தோம்.
"அதேபோல் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம் தொடங்கிய உறவு அவரது பேரன் உதயநிதி வரை நீடிக்கிறது.
"இந்தி ஒழிக என்று சொல்வது என் வேலை அல்ல. தமிழ் வாழ்க எனச் சொல்வதுதான் என் கடமை," என்றார் கமல்ஹாசன்.
கமல்ஹாசன்
'விக்ரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் விரைவில் ஒளிபரப்ப உள்ளது.
, :

