ஒரு நடிகராக தமது திரைப்பயணத்தின் முக்கிய காலகட்டத்தில் இருப்பதாகச் சொல்கிறார் ஜிவி பிரகாஷ். அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்துள்ள 'பேச்சுலர்', 'செல்ஃபி', 'ஜெயில்', 'ஐங்கரன்' ஆகிய நான்கு படங்களுமே விமர்சன ரீதியில் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் இது தமக்கு மனநிறைவைத் தந்துள்ளதாகவும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"திரைப்படங்களில் நடிப்பது என முடிவு செய்த பின்னர் சில நகைச்சுவைப் படங்களில் நடித்தேன். அதன் பிறகு எனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அமைந்தன. இப்போது ஜிவி பிரகாஷ் படங்கள் என்றால் நல்ல கதைக்கருவும் களமும் இருக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள். நானும் அவர்களது எண்ணத்துக்கு ஏற்ப அதுபோன்ற கதைகளில்தான் கவனம் செலுத்தி வருகிறேன்.
"சினிமாவில் நடிப்பது என்பது இசையமைப்பது போன்றதுதான். ஏதாவது வித்தியாசமான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுகிறோம். அதில் இருந்து கிடைக்கும் அனுபவங்களைப் பாடமாக எடுத்துக் கொள்கிறோம்.
"உண்மையில் திரையுலகில் எனக்கான இடம் எது என்பதை நான் இன்னும் முழுமையாகக் கண்டறியவில்லை. எனினும் அண்மைக்காலமாக நேர்மறை விமர்சனங்களைப் பெற்று வருகிறேன்," என்கிறார் ஜிவி.
கனமான கதைகளிலும் காட்சிகளிலும் நடிப்பது அவ்வளவு எளிதல்ல என்று குறிப்பிடுபவர், அவை ஏற்படுத்தும் தாக்கங்களில் இருந்து வெளிவர நேரமாகும் என்கிறார். அதற்கான சில உதாரணங்களையும் பட்டியலிடுகிறார்.
"உதாரணமாக 'செல்ஃபி' படத்தில் என் தந்தையிடம் பேசும்போது மனதளவில் உடைந்துபோக வேண்டும். அக்காட்சியில் நடித்து முடித்த பிறகு, அதிலிருந்து மீண்டுவர நான்கு மணி நேரமானது. அதுவரை வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அதேபோல் 'ஜெயில்' படத்தின் இடைவேளை காட்சியைச் சொல்லலாம். அதில் நடித்த பிறகு ஒரு நாள் முழுவதும் அதன் பாதிப்பு என்னிடம் இருந்தது.
"எனவே நான்கு கனமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து முடித்திருப்பதால், அடுத்து நகைச்சுவைப் படமா என்று சிலர் கேட்கிறார்கள். உண்மையில் அடுத்து என்ன என்பது எனக்கு தெரியவில்லை.
"இன்றைய இளம் ரசிகர்களை எவ்வாறு அணுக வேண்டும் எனும் சூட்சமத்தை அறிந்த ஓர் இயக்குநரை நான் இன்னும் சந்திக்கவில்லை. ஒருவேளை அப்படிப்பட்ட ஒருவரை சந்திக்கும் பட்சத்தில் மீண்டும் நகைச்சுவைப் படங்களில் நடிப்பேன்," என்று சொல்லும் ஜிவி பிரகாஷ், தம்மை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் லாபம் காண வேண்டும் என்பதற்கு மிகுந்த முன்னுரிமை அளிப்பதாகச் சொல்கிறார்.
தமது படங்கள் வசூல் ரீதியில் தோல்வி அடையவில்லை என்பதை உறுதி செய்தால்தான் ஒரு நடிகராக தாம் வெற்றிபெற முடியும் என்று குறிப்பிடுபவர், இதையெல்லாம் மனதிற்கொண்டே படங்களைத் தேர்வு செய்வதாகக் கூறுகிறார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் எதிர்காலத் திட்டம்?
"உறுதியாகத் தெரியவில்லை. எனினும் மனதளவில் நான் முதிர்ச்சி அடைந்துள்ளேன் என உறுதியாக நம்புகிறேன். நான் இசையமைக்கும் படங்களுக்கான பின்னணி இசையைக் கவனிக்கும்போது இதை உணர முடிகிறது.
மேலும் 'சூரரைப் போற்று', 'அசுரன்' படங்களின் மூலம் இசைஅமைப்பில் நான் அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிட்டதாக நினைக்கிறேன். இப்போது 'சூரரைப் போற்று' இந்திப் பதிப்பு, ரவி தேஜா நடிக்கும் தெலுங்குப் படங்களுக்கு இசையமைக்கிறேன்.
"நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த வளர்ச்சி என்னை எங்கு கொண்டு செல்கிறது என்பது தெரியவில்லை. அது நல்ல இடமாகத்தான் இருக்கும்," என்கிறார் ஜிவி பிரகாஷ்.
பல பெரிய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கு இசையமைக்கும்படி ஜிவி பிரகாஷை தொடர்ந்து கேட்டு வருகின்றன. அவற்றுள் சில படங்களுக்கு மட்டும் இசையமைக்க ஒப்புக் கொள்வது என முடிவு செய்துள்ளாராம்.

