தமிழ் சினிமாவில் புது வரவுகளில் இளம் நாயகி பாடினி குமாரும் ஒருவர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்துள்ளார்.
'நாயகி', 'திருமணம்' ஆகிய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தவர்களுக்கு பாடினியை நிச்சயம் தெரிந்திருக்கும்.
தற்போது 'டேக் டைவர்சன்' என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.
அதென்ன பாடினி? என்று இவரது பெயருக்கான விளக்கத்தை பலரும் கேட்கிறார்களாம்.
"பாடினி என்றால் இசைக் கலையின் அரசி எனப் பொருள். அது மட்டுமல்ல, என் பெற்றோர் தமிழ் ஆர்வலர்கள். அதனால் குடும்ப நண்பரான தமிழறிஞர் அருணாசலம், 'உங்கள் மகளுக்கு காகங்களைப் போல் தமக்குக் கிடைத்ததை பிறர்க்கும் கொடுக்கும் குணம் இருப்பதால் காக்கையைப் போற்றிப் பாடிய காக்கை பாடினியார் நினைவாக பாடினி என பெயர் வைப்போம்' என்றார். அதைப் பெற்றோரும் ஏற்றுக்கொண்டனர்.
பாடினியின் சொந்த ஊர் நெல்லை. ஆனால் வளர்ந்தது முழுக்க சென்னையில்தானாம்.
இருதய சிகிச்சை சம்பந்தப்பட்ட தொழில்நுட்பப் படிப்பை முடித்துவிட்டு, தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்துள்ளார்.
எனினும், சிறு வயது முதலே நடிப்பில்தான் ஆர்வம் அதிகமாம். அதனால் வேலை பார்த்துக்கொண்டே நடிப்பதற்கு வாய்ப்பு தேடி இருக்கிறார்.
"வீட்டில் பெரிதாக எதிர்ப்பு இல்லை. அதனால் சுதந்திரமாக வாய்ப்புகளைத் தேட முடிந்தது. அப்படி கிடைத்ததுதான் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த வாய்ப்பு.
"திரைப்பட நடிகை ஆக வேண்டும் என்பதுதான் இலக்கு என்றாலும், சின்னத்திரையில் கிடைக்கும் அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும் என நம்பினேன்.
"அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. கேமரா முன்பு நிற்கும்போது எந்தவித பயமும் இல்லாமல் நடிக்க முடிகிறது.
"நான் இப்போது நடித்து வரும் 'டேக் டைவர்ஷன்' படம் இளையர்களைக் கவரும் வகையில் உருவாகி வருகிறது. கடந்த 1970 தொடங்கி 2000ஆம் ஆண்டு வரை பிறந்தவர்களின் வாழ்க்கை இப்போது எப்படி இருக்கிறது என்பதுதான் கதைக்களம். இதில், எனக்கு முக்கிய கதாபாத்திரம் அமைந்துள்ளது.
"நன்கு சுருள் முடி கொண்ட பெண் தேவை என்று இப்படக்குழுவினர் தேடி வந்தனர். அதுகுறித்து தகவல் கிடைத்தபோது, நான் நேரில் சென்றேன்.
"நடிப்புத்தேர்வு, தோற்றப் பொருத்தம் ஆகியவற்றுக்குப் பிறகு என்னைத் தேர்வு செய்தனர். அடுத்த மாதம் இந்தப் படம் வெளியாக உள்ளது," என்று சொல்லும் பாடினி குமார், முறைப்படி நடனம் கற்றவர்.
திரைப்பட பின்னணிப் பாடகர் வேல்முருகனின் மனைவிதான் இவரது பரத நாட்டிய குரு. பரதம் மட்டுமல்லாமல், அனைத்து வகை நடனமும் பாடினிக்கு அத்துப்படியாம்.
"வீட்டில் இருக்கும்போது நடனமாடிக்கொண்டே இருப்பேன். அந்த அளவுக்கு அதில் ஈடுபாடு உள்ளது. நடனத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
"மேலும், எத்தகைய சவாலான கதாபாத்திரமாக இருந்தாலும், அதை ஏற்று நடிக்கத் தயார். மிகச்சிறந்த நடிகை எனப் பெயர் வாங்க வேண்டும் என்ற ஆசை எல்லோரையும் போல் எனக்கும் உண்டு.
"வாய்ப்புக்காக தேவையின்றி கவர்ச்சி காட்டுவதில் எனக்கு விருப்பம் இல்லை. எனினும், நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துக்கு அவசியம் எனில் ஓரளவு கவர்ச்சியாக நடிப்பேன். அதே சமயம் நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன். என் பெயரைப் போலவே என் நடிப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்," என்கிறார் பாடினி குமார்.

