வேலுதாஸ் இயக்கத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'துடிக்கும் கரங்கள்'. மும்பையைச் சேர்ந்த மனிஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தில் யூடியூப் சேனல் நடத்தும் செய்தியாளராக விமலும் அவரது நண்பராக சதீஷும் நடித்துள்ளனர். செய்தியாளராக தன் வேலையை ஒழுங்காகச் செய்து வரும் விமலுக்கு திடீரென செல்வாக்குள்ள ஒருவரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்புகிறது. இதனால் ஏற்படும் பிரச்சினைகளை அவர் எவ்வாறு துணிச்சலுடன் எதிர்கொள்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதையாம்.
"இதுவரை நகரத்து இளையராக அதிகம் நடித்திராத ஒருவர் செய்தியாளர் கதாபாத்திரத்தில் நடித்தால் சரியாக இருக்கும் என்று கருதினேன். அதனால் விமலை நாயகனாகத் தேர்வு செய்தோம்.
"தொடக்கம் முதல் முழுப்படம் முடியும்வரை அருமையாக ஒத்துழைத்தார். இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான சுரேஷ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். அவரிடம் இருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். இயக்குநராக எனக்குள்ள சுமையைப் புரிந்துகொண்டு அந்தச் சுமையை எளிதாக்கும் விதமாகச் செயல்பட்டார்," என்கிறார் இயக்குநர் வேலுதாஸ்.
மும்பையைச் சேர்ந்த 'இந்தியன் சகீரா' என்று அழைக்கப்படும் சினேகா குப்தா, இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். இந்தப் பாடல் இளையர்களை நிச்சயம் கவரும் என்கிறது படக்குழு.
ராகவ் பிரசாத் இந்தப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

