நயன்தாரா நடிப்பில் அடுத்து '0.2' என்ற வித்தியாசமான தலைப்பில் ஒரு திரைப்படம் உருவாகி உள்ளது. இது அவருக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும் அதே வேளையில், ஒரு விஷயம் அவரை வருத்தத்திலும் மூழ்கடித்துள்ளது.
நயன்தாராவை கோடம்பாக்க வட்டாரங்களில் லேடி 'சூப்பர் ஸ்டார்' என்றுதான் குறிப்பிடுகின்றனர். அண்மையில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் தலைப்பிலும் அவருக்கு இந்த அடைமொழி கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், '0.2' படத்தின் தலைப்பிலும் நயன்தாரா பெயருடன் இந்த 'லேடி சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தைச் சேர்க்கவேண்டும் என அவரது தரப்பு விரும்புகிறதாம். இதுகுறித்து படத்தின் தயாரிப்புத் தரப்பிடம் நேரடியாகப் பேசி உள்ளார் விக்னேஷ் சிவன்.
ஆனால் இதுவரை சாதகமான பதில் எதையும் தயாரிப்புத் தரப்போ இயக்குநரோ தரவில்லையாம். படம் விரைவில் வெளியீடு காண உள்ள நிலையில், தமது கோரிக்கை ஏற்கப்படாதது நயன்தாராவுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
"பொதுவாக நடிகர்களுக்கு ரசிகர்கள் விழா நடத்தி பட்டப்பெயர்களைக் கொடுப்பதில்லை. ரஜினிக்கு 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தை தயாரிப்பாளர் தாணு கொடுத்தார். விஜய்க்கு அவரது தந்தை பட்டம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
"அஜித் தனக்கு பட்டமோ ரசிகர் மன்றமோ தேவை இல்லை என்று தொடர்ந்து கூறி வருகிறார். இன்று தங்கள் பெயருக்கு முன்னால் அடைமொழிகளைச் சேர்த்துக்கொள்ளும் பெரும்பாலான ரசிகர்களுக்கு இது தெரியும். நயன்தாராவுக்கும் கூட அவரது தரப்புதான் பட்டப் பெயர் கொடுத்தது.
"அண்மையில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் அவரது சொந்தத் தயாரிப்பு. அதனால் அவர் விரும்பிய வகையில் படத்தலைப்பில் பட்டப் பெயர் இடம்பெற்றது. ஆனால் பிற தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் இதற்கு ஒப்புக்கொள்வார்களா என்பது சந்தேகம்தான்," என்கிறார் மூத்த செய்தியாளர் ஆர்.எஸ்.அந்தணன்.
விஜய்யின் 'தளபதி 67' படத்தை அவரது குடும்ப உறவினரும் 'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பாளருமான லலித் தயாரிக்கப்போவதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுடைய ரெட்ஜெயண்ட் நிறுவனம்தான் விஜய் படத்தை தயாரிக்க உள்ளதாக வெளியான புதுத்தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கெனவே கோடம்பாக்கத்தில் தயாராகும் அனைத்து பெரிய படங்களையும் உதயநிதி தனது நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக ஒரு தகவல் உலா வருகிறது. இதை அவர் மறுத்துள்ள நிலையில், விஜய்யின் அடுத்த படத்தையும் அவர் கைப்பற்றி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இது தவறான தகவல் என்றும் படத்தை லலித் தயாரிக்க, அதன் வெளியீட்டு உரிமையைத்தான் ரெட்ஜெயண்ட் பெற உள்ளதாக கூறப்படுகிறது.
மிஷ்கின் இயக்கத்தில் அடுத்து உருவாக உள்ள படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். தாம் சொன்ன நான்கு கதைகளுமே விஜய் சேதுபதிக்குப் பிடித்துப்போனதாகவும் அவற்றுள் அவருக்கு அதிக மனநிறைவைத் தந்த கதையைப் படமாக்க உள்ளதாகவும் மிஷ்கின் கூறியுள்ளார்.
நடிகர் யோகி பாபு தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், 'பொம்மை நாயகி' என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் அவரது நடிப்பைக் கண்டு அப்படக்குழுவினர் மலைத்துப்போனதாகத் தகவல். பாலியல் தொல்லையால் சிறார்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அலசுகிறது இப்படம்.

