தமிழ் சினிமாவின் தலைநகரம் என்று குறிப்பிடப்படும் கோடம்பாக்கத்தில் மீண்டும் ஒரு வேலை நிறுத்தப் போராட்டம் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
வெளிப்புறப் படப்பிடிப்பு தொழிலாளர் சங்கம் எதிர்வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்தச் சங்கத்தில் உறுப்பினராகச் சேர இதுவரை குறைவான கட்டணமே வசூலிக்கப்பட்டு வந்ததாகவும் இப்போது அதை மூன்று லட்சமாக உயர்த்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
"தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான 'ஃபெப்சி' அமைப்பில் வெளிப்புறப் படப்பிடிப்புத் தொழிலாளர் சங்கமும் உறுப்பினராக உள்ளது. இந்நிலையில் உறுப்பினர் சேர்க்கைக் கட்டணத்தை பலமடங்கு அதிகரித்திருப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது," என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா நெருக்கடிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகத்தில் பணிகள் வேகமெடுத்துள்ளன. திரைப்படங்கள், இணையத் தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்புகள் பரவலாக நடைபெற்று வருகின்றன.
இதனால் திரைப்படத் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பால் பரபரப்பும் நிலவுகிறது.

