சர்ச்சைக்குரிய விவகாரங்களில் கருத்து தெரிவிக்கத் தயங்காத திரையுலகப் புள்ளிகளின் பட்டியலில் நிகிலா விமலுக்கும் இடமுண்டு.
'வெற்றிவேல்', 'கிடாரி', 'பஞ்சு மிட்டாய்', 'ஒன்பது குழி சம்பத்' படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். இவரது நடிப்பில் தமிழில் அண்மையில் வெளியான படம் 'ரங்கா'.
இதில் நாயகன் சிபிராஜுக்கு இணையாக நடித்திருந்தார். இப்படத்துக்காக காஷ்மீரில் நடந்த படப்பிடிப்பை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது என்கிறார் நிகிலா.
"கிட்டத்தட்ட 'ரோஜா' படத்தின் கதை போன்றது. உறைபனி ஒத்துக்கொள்ளாமல் படக்குழுவினருக்கு முகமெல்லாம் தோல் உரியத் தொடங்கிவிட்டது. பலருக்கு கால் நகங்களில் புண் வந்து சிரமப்பட்டனர். பனி உறைந்த ஏரிப் பகுதியிலும் சில காட்சிகளைப் படமாக்கினார் இயக்குநர்.
"மாஃபியா கும்பலிடம் இருந்து தப்பித்துச் செல்லும் என்னையும் சிபியையும் கழுத்தில் ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வில்லனுடைய நாய் துரத்திக்கொண்டு வருவதுபோல் ஒரு காட்சி. அதற்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஒரு வேட்டை நாயை அழைத்து வந்திருந்தார்கள். எங்கே அது என்னைக் கடித்துவிடுமோ என்கிற பயம் கடைசி வரை இருந்துகொண்டே இருந்தது. அது மறக்கமுடியாத அனுபவம்," என்று முகத்திலும் குரலிலும் திகில் குறையாமல் பேசும் நிகிலா விமலுக்கு தமிழில் இன்னும் வெற்றிப் படம் அமையவில்லை.
'பஞ்சு மிட்டாய்', 'ஒன்பது குழி சம்பத்' ஆகிய இரு படங்களையும் கதைக்காகத்தான் தேர்வு செய்தாராம். ஆனால் இரண்டும் வசூல் ரீதியில் வெற்றி பெறவில்லை. அதற்கு, தாம் காரணமாக இருக்க முடியாது என்கிறார்.
"ஒரு தரமான படைப்பு வெற்றி பெறவில்லை என்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக நான் காரணமாக இருக்க மாட்டேன். இப்போது ஓரளவு வளர்ந்த நடிகையாக இருக்கிறேன் என்றால் அதற்கு நான் தேர்ந்தெடுக்கும் கதைகளும் கதைக்களங்களும்தான் காரணம். தவிர, யாரெல்லாம் என்னுடன் நடிக்கிறார்கள் என்பது பற்றி கவலைப்பட்டதில்லை. அதனால்தானோ என்னவோ, தமிழில் தொடக்கம் முதலே பல மூத்த நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. கார்த்தி சாருடன் நடித்த 'தம்பி' வெற்றிப்படம்தான்," என்கிறார் நிகிலா.
வெற்றி, தோல்விகளை மீறி நிகிலாவின் நடிப்பு விமர்சகர்களால் தொடர்ந்து பாராட்டப்படுகிறது. இதை பெருமையாகக் கருதுவதாகச் சொல்கிறார்.
"மலையாளத்தில் எனக்குத் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் அமைகின்றன. என்னைவிட சிறப்பாக நடிக்கக்கூடிய நடிகைகள் உள்ளனர். மற்ற மொழிகளில் இவ்வாறு பல திறமைசாலிகள் இருப்பதை நான் அறிவேன். அதேசமயம் எனக்கான பாராட்டுகளை யாராலும் தட்டிப்பறித்துவிட முடியாது.
"விமர்சகர்களின் பாராட்டுகள் வெளியாகும்போது அவற்றை மறக்காமல் என் தாயாரின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன். நான் இன்று திறமையான நடிகை என்று பெயரெடுப்பதற்கு அவர்தான் காரணம். அவர் சொல்லிக்கொடுத்த நடனம்தான் கலைகளின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியது," என்று நெகிழும் நிகிலா விமல், சமுதாயத்துக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்க வேண்டியது அவசியம் என்கிறார்.
சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க யாரும் தயங்கக்கூடாது என்றும் ஒவ்வொரு குடிமகனும் இந்தக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் சொல்கிறார்.
கொரோனா நெருக்கடி வேளையில் நிகிலாவின் தந்தை காலமாகிவிட்டார். அந்த இழப்பின் சோகத்தில் இருந்து தம்மால் என்றுமே வெளிவர முடியாது என்கிறார்.
"மீண்டு வரக்கூடிய இழப்பல்ல அது. தந்தைக்கு நண்பர்கள் அதிகம். எங்கள் வீடு அவரது நண்பர்களால் எப்போதும் நிறைந்திருக்கும்.
"அரசுப் பணி, பிறகு ஆசிரியப் பணியில் இருந்தபோது எங்களை அக்கறையுடன் பார்த்துக்கொண்டார். ஓய்வுபெற்ற பிறகும் எங்களைக் கொண்டாடினார். அவருக்கு உடலில் சில பிரச்சினைகள் இருந்ததால் அவரை கொவிட் தொற்றிவிடக் கூடாதே என்று மிகுந்த கவனத்துடன் பார்த்துக்கொண்டோம்.
"அப்பாவுக்காக நான் சில பட வாய்ப்புகளை மறுத்தேன். ஆனாலும் பயனில்லை. மீண்டுவிடுவார் என்று நினைத்தபோது காலமாகிவிட்டார். அந்த வலிமிகுந்த நாள்களை வாழ்நாளில் மறக்க முடியாது," என்கிறார் நிகிலா விமல்.

