தமிழ்த் திரையுலகத்திற்கு மீண்டும் நல்லநேரம் தொடங்கிவிட்டது.
தற்போது வெளியாகும் படங்கள் பல வசூல் ரீதியில் வெற்றிபெற்று வருகின்றன. இதே நிலை நீடித்தால் திரைத்துறை பழைய நிலையை மிக விரைவில் எட்டிவிடும் என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தளர்த்தி உள்ளன. இதையடுத்து தமிழ்த் திரையுலகப் பணிகள் சூடுபிடித்துள்ளன. முன்னணி நடிகர்கள் தொடங்கி புதுமுகங்கள் வரை அனைவரும் பட வேலைகளில் மூழ்கி உள்ளனர்.
அடுத்து வரும் மாதங்களில் ஏராளமான படங்கள் வெளியீடுகாண உள்ளன. அதனால் திரையரங்குகளைக் கைப்பற்றுவதில் முன்னணி நடிகர்கள், நிறுவனங்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது. இந்நிலையில், புதுப்படங்களின் வசூல் நிலவரங்கள் மனநிறைவு தரும் வகையில் இருப்பதாக திரையுலகப் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஐந்து மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான படங்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக பிப்ரவரி மாதம் முதல் வசூல் அதிகரிக்கத் தொடங்கியது.
'வலிமை', 'எதற்கும் துணிந்தவன்', 'பீஸ்ட்' ஆகிய முன்னணி நடிகர்களின் படங்கள் வசூல் ரீதியாக வெற்றியடைந்தன. விஜய், அஜித் படங்கள் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் கண்டன. சூர்யாவின் படமும் சோடைபோகவில்லை. அடுத்த நிலை நடிகர்களின் படங்களான 'எஃப்ஐஆர்', 'மன்மத லீலை', 'செல்ஃபி', 'காத்து வாக்குல ரெண்டு காதல்', 'டான்' ஆகிய படங்களும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளன. குறிப்பாக சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த மூன்று படங்களுமே வசூலில் அசத்தி உள்ளன.
"'வலிமை', 'பீஸ்ட்' ஆகிய இரு படங்களுமே இருநூறு கோடி ரூபாய் வசூலைப் பெற்றன என்பது அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. சிவகார்த்திகேயன் தனது அண்மைய படங்கள் நூறு கோடி ரூபாய் வசூல் பெற்றதாக தாமே அறிவித்தார்.
"இதெல்லாம் ஒருபுறம் இருக்க, நேரடித் தமிழ்ப் படங்களைக் காட்டிலும் பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்களின் வசூல் மலைக்க வைக்கிறது. 'ஆர்ஆர்ஆர்', 'கேஜிஎஃப்' 2' படங்கள் நேரடித் தமிழ்ப் படங்களுக்கு இணையான வசூலைத் தந்துள்ளன," என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.

